சென்னை : வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 1000 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கேள்வி பதில் நேரத்தின் போது, மதுரை தெற்கு தொகுதி கிருதுமால் நதி, அனுப்பானடி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், சிந்தாமணி வாய்க்கால் ஆகியவற்றை தூர்வார வேண்டும் என்று மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கிருதுமால் நதி சீரமைப்பு பணிக்கு ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். மதுரை அனுப்பானடி வாய்க்கால் , பனையூர் வாய்க்கால் , சிந்தாமணி வாய்க்கால் உள்ளிட்டவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றை தூர்வார மாநகராட்சியை அணுகவும்,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பல சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். அவை பின்வருமாறு..
உறுப்பினர் காமராஜ் கேள்வி : திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை விட வாய்க்கால் மேடாகி வருகிறது. வாய்க்கால் தூர்வார வேண்டும்; இல்லாவிட்டால் தடுப்பணை கட்ட வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் பதில் : அணைகளை விட தடுப்பணைதான் பலர் கேட்கின்றனர். இந்த ஆண்டில் 1000 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
உறுப்பினர் ஸ்டாலின் குமார் கேள்வி : திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஊருக்குள் நீர் புகுந்தது.பச்சமலையில் இருந்து வரும் வாய்க்காலை தூர் வார வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் பதில் : வாய்க்கால்கள் தூர்வார அதிக கோரிக்கை வருகிறது; வரும் நிதியாண்டில் நிதிஒதுக்கினால் தூர்வாரப்படும். அமைச்சர் தங்கம் தென்னரசு கனிவுள்ளம் கொண்டவர், இந்த ஆண்டு எனது துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கேள்வி : 7 மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் மாவட்டம் உள்ளது; மாவட்டத்துக்கு பேரிடர்களை தணிக்க சிறப்பு திட்டம் தேவை.
அமைச்சர் துரைமுருகன் பதில் : உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி : திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். கடந்த வாரம் பெய்த மழையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முல்லை நகர், தனலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகரில் வெள்ளம் ஏற்பட்டது. வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் அரைகுறையாக நடந்துள்ளது. கடந்த காலங்களில் 20 நாட்கள் மழை நீர் தேங்கிய நிலையில் தற்போது ஓரிரு நாட்களில் மழை நீர் வடிந்துவிடுகிறது. ஆகவே திருப்புகழ் கமிட்டியின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். நான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராவது அமைச்சர் துரைமுருகன் கையில் தான் உள்ளது.
அமைச்சர் துரைமுருகன் பதில் : மழைநீர் தேங்குவதாக சொல்லக்கூடிய பகுதிகளில் அரசு கவனம் செலுத்தும்.
உறுப்பினர் சதாசிவம் கேள்வி : காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன் பதில் : காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
The post வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 1000 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி appeared first on Dinakaran.