வால்பாறை: வால்பாறை மலைப்பகுதியில் காட்டு யானைகள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வால்பாறை பகுதியானது வருவாய்துறை பதிவேடுகளில் ஆனைமலை என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.வருடந்தோறும் யானைகள் ஆகஸ்ட் மாதம் முதல் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வலசப்பாதைகளில் மாற்று உணவிற்காக வால்பாறை மக்கள் வாழும் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அடர் வனப்பகுதிகளில் ஒரே வகையான உணவுகளை சாப்பிடும் யானைகள் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை மாற்று பகுதிகளுக்கு வலசை பாதையில் வலம் வந்து, மாற்று வகை தாவர உணவுகளை உட்கொள்ளும் என கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை குறையும் என்பதால் மாற்று இடங்களுக்கு படையெடுக்கிறது.
இவ்வாறு மாற்று வலசப்பாதையில் வரும் யானைகள் ஊருக்குள் புகுந்து, விடிய துவங்கியதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு வனங்களில் முகாமிட்டு, நுகர்வு சக்தி மூலம் ரேஷன் கடை, பள்ளி சத்துணவு கூடம், வீடுகளில் வைக்கப்படும் ரேஷன் அரிசி, சில நேரங்களில் குவாட்டர் பாட்டில்களைகூட வீடுகளை உடைத்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும்போது கிடைக்கும் மிக்சர், பிஸ்கட், போண்டா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களையும் விட்டு வைப்பது இல்லை.
யானைகளிடம் தப்பிக்க வால்பாறை பகுதியில் வன ஆர்வ தனியார் அமைப்பு யானை உள்ள பகுதிகள் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். யானை உள்ள எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு மின் விளக்கு வைத்து எச்சரிக்கை விடுக்கின்றனர். வனத்துறையின் மனித-விலங்கு மோதல் தடுப்பு பிரிவினர் இரவு ரோந்து மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகுந்தால் தடுத்து வனத்திற்குள் விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் தற்போது யானைகள் மீண்டும் வனத்திற்குள் இருந்து வந்த வலச பாதையில் மீண்டும் பயணிக்க தொடங்கி உள்ளது. எனவே மீண்டும் குடியிருப்புகளுக்கு வரலாம் எனவும், பிப்ரவரி மாதம் இறுதி இடப்பெயர்ச்சி இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
The post வலசை பாதைகளில் மீண்டும் வனத்திற்குள் செல்லும் யானைகள் appeared first on Dinakaran.