திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து கொத்தக்கோட்டை கிராமம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் சென்ற அரசு பேருந்து கோத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அப்போது பேருந்துக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவி தேர்வுக்கு செல்ல வேண்டும் என்பதால் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து ஓடியுள்ளார். சிறிது தூரம் ஓடிய நிலையில் பேருந்து நிறுத்தப்பட்டு மாணவி ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது போக்குவரத்துக்கழகம் சார்பில், அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் முனிராஜ் என்பவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆம்பூர் பணிமனையை சேர்ந்த முனிராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பணியில் இருந்த நடத்துநர் தற்காலிக பணியாளர் என்பதால் அவரையும் பணியில் இருந்து விடுவிக்க சம்பத்தப்பட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.