சென்னை: ஜன.11-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழக பகுதிகளான ராமநாதபுரம், நாகபட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.