அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் காட்டுத் தீ, தாண்டவமாடி வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீக்கிரையாகி இருக்கின்றன. இதில் ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் தப்பவில்லை. ஹாலிவுட் திரை பிரபலங்களான, பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல், ஆடம் பிராடி, ஜேமி லீ கர்டிஸ், ஜெஃப் பிரிட்ஜஸ் உட்பட பல நடிகர்களின் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த தீ விபத்து காரணமாக ஏராளமான ஹாலிவுட் திரைப்பட படப்பிடிப்புகளும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாரிஸ் ஹில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “எனது வீடாக இருந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். எனது வேதனை விவரிக்க முடியாதது. சிதைந்து கிடக்கிற என் வீட்டை நேரில் பார்க்கும்போது என் இதயம் லட்சக்கணக்கான துண்டுகளாக நொறுங்கியதுபோல் உணர்கிறேன். இது நாங்கள் வாழ்ந்த இடம் மட்டுமல்ல. கனவுகளையும் சிரிப்பையும் எங்கள் குடும்பத்தின் அழகான நினைவுகளையும் உருவாக்கிய இடம். அது சாம்பலாகிக் கிடப்பதைப் பார்ப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பேரழிவு. வாழ்க்கை ஒரு நொடியில் மாறிவிடும். நாம் பகிர்ந்து கொள்ளும் அன்புதான் உண்மையிலேயே முக்கியமானது. இப்போது வேதனையில் இருக்கும் அனைவருக்கும் என் ஆதரவைத் தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.