சென்னை: வாழ்வாதாரம் உறுதிக்கும் – பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக ‘சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம்’ அரசு இயற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் 2025-26ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு நிதிநிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலைத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை ஆகிய துறைகளை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் மூர்த்தி, ராஜேந்திரன்,மதிவேந்தன், துறை சார்ந்த அரசு செயலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 21 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒற்றை சாளர முறையில் ஆயுள் உரிமமாக மாற்றி வணிகர்கள் எளிதில் உரிமம் பெற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், தமிழக அரசு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த மாதாந்திர மின்கட்டண நடைமுறையை வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி வேளாண் இடுபொருட்கள் விதைகள், உபகரணம், உரம், பூச்சி மருந்துக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிட வேண்டும், வணிகர்களின் வாழ்வாதார உறுதிக்கும் மற்றும் பாதுகாப்புக்கும் அரசு முன்னுரிமை அளித்து சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும், சாலைகளிலும், வெளி இடங்களிலும் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டி மற்றும் பழைய உலோக கழிவு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரிவிலக்கு அளித்திட வேண்டும், முதியோர், நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஆயுள் மற்றும் உடல் நலத்திற்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிட ஒன்றிய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்திட வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வாழ்வாதாரம் உறுதிக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் விதமாக ‘சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம்’ இயற்ற வேண்டும் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை appeared first on Dinakaran.