வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் 26 வயது இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவி தேஜா ஐதராபாத்தின் சைத்தன்யபுரியில் உள்ள கிரீன் ஹில்ஸ் காலனியைச் சேர்ந்தவர். தனது பட்ட மேற்படிப்புக்காக 2022ல் அமெரிக்கா சென்ற ரவி தேஜா, படிப்பை முடித்துவிட்டு அங்கு வேலை தேடிக் கொண்டிருந்தார். ரவி தேஜாவை சுட்டுக் கொன்றது யார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வாஷிங்டன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சைதன்யபுரியைச் சேர்ந்த கொய்யாடா ரவிதேஜா (வயது 26) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு மேற்படிப்பிற்காக வாஷிங்டன் சென்றார். அங்கு படிப்பை முடித்த இவர், வேலைக்காக காத்திருந்தார். இந்த நிலையில், வாஷிங்டனில் உடலில் குண்டு காயங்களுடன் ரவிதேஜா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரை யாரேனும் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரிய வராத நிலையில், இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படும் சம்பவம், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒன்றிய பாஜக அரசு தோல்வி அடைந்ததாக அங்கு உள்ள காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவர் சங்கம் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏன் அமைதியாக இருக்கிறது? வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
The post வாஷிங்டனில் இந்திய மாணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை: போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.