சென்னை: விஐடி சென்னையில் வைப்ரன்ஸ் 2025 சர்வதேச கலை மற்றும் விளையாட்டு திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கியது. இதனை, இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சஹார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகர் அர்மான் மாலிக், பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பாடகி ஆஸ்தா கில், பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் 28ம் தேதி வரை சிறப்பாக நடந்தது. மொத்தம் 200க்கும் மேற்பட்ட கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதன் நிறைவு விழா, கடந்த 1ம் தேதி மாலை நடந்தது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். இதில், பிரபல திரைப்பட நடிகர் நாக சைதன்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘இன்று நான் வாழ்க்கையில் எங்கிருந்தாலும் அதை நான் என் ஆசிரியர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நாம் கல்லூரி படிக்கும் காலங்களில் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கிறது.
கல்லூரி படிப்பை முடித்து வெளி உலகுக்கு சென்றதும் சவால்களை சந்திக்க நேரிடும். அது மிகவும் கடினமானது. எனவே, கல்லூரி காலத்தை மாணவர்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மன அழுத்தத்துக்கு உள்ளாகாதீர்கள். எதை செய்தாலும் 100 சதவீதம் உண்மையாக உழையுங்கள், அது கல்வியாக இருந்தாலும் சரி, கலாச்சார நிகழ்வாக இருந்தாலும் சரி. வாழ்க்கையில் எப்போதும் உங்களுக்கு ஒரு வேகத்தடை உண்டாகும். அதை முற்றுப்புள்ளியாக பார்க்காதீர்கள். அதை ஒரு சவாலாக கருதி உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். அதை நிஜமாக்க பாடுப்பட வேண்டும். கற்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். முடிவுகளை நினைத்து பயப்படாதீர்கள். அந்த கனவை பின்பற்றுங்கள், நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வீர்கள். என்னுடைய உடல் நலன் ஆரோக்கியத்துக்கு வாழ்வின் மகிழ்ச்சியே காரணம்,’’ என்றார். விழாவில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், “வறுமையை எதிர்த்து போராடக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். எனவே, கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு மட்டுமல்ல, உயர்கல்விக்கும் செல்ல ஊக்குவிக்கப்பட வேண்டும்,’’ என்றார்.
சர்வதேச வைப்ரன்ஸ் கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற காட்டாங்ெகாளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நடிகர் நாக சைதன்யா, விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மற்றும் விஐடி துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கோப்பையை வழங்கி கவுரவித்தனர். இறுதியாக நடந்த டி.ஜே ஜூலியா ப்ளிஸ் மற்றும் டி.ஜே ப்ராக்ரெஸ்ஸிவ் ப்ரதர்ஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்று ரசித்தனர். நிறைவு விழாவில், விஐடி இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன், மாணவர் நலன் இயக்குநர் முனைவர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
4 நாட்கள் நடந்த வைப்ரன்ஸ் விழாவில் இலங்கை, தைவான், தான்சான்யா, உருகுவே, மலேசியா, பிரேசில், இந்தோனேஷியா, கம்போடியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், ஐ.ஐ.டி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் 22,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.
The post விஐடி சென்னையில் வைப்ரன்ஸ் சர்வதேச கலைவிழா: நடிகர் நாக சைதன்யா பங்கேற்பு appeared first on Dinakaran.