விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூரில் சட்ட விரோதமாக ரசாயன கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டதை பனையேறிகள் கும்பலாக திரண்டு தடுத்து நிறுத்தி அவற்ைற அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமளவு பனை மரத்தை நம்பியே பனையேறிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நுங்கு, பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனங்கிழங்கு உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு அதை சார்ந்து பனையேறிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில மாதங்களாக கஞ்சனூர் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக ரசாயனம் கலந்த பனங்கள் தனிநபர் ஒருவர் விற்பனை செய்து வருவதாக பனையேறிகள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் அளித்திருந்தனர். இதனிடையே அத்தியூர் திருக்கை பகுதியில் சட்ட விரோதமாக ரசாயனம் கலந்த பனங்கள் நேற்று விற்பனை செய்யப்படுவதாக பனையேறிகளுக்கு தகவல் கிடைத்தன.
இதையடுத்து 20க்கும் மேற்பட்ட பனையேறிகள் ரகசியமாக அப்பகுதிக்கு சென்றனர். இவர்களை கண்டதும் சட்டவிரோதமாக கள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் ரசாயனம் கலந்த பனங் கள் மற்றும் ரசாயனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரசாயனம் கலந்த பனங்கள்ளை கீழே கொட்டி அழித்த பனையேறிகள், அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த தனிநபரை சுற்றி வளைத்தனர். ரசாயனம் கலந்த பனங்கள்ளை சட்டவிரோதமாக விற்கக் கூடாது என எச்சரித்தனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம், பனையேறிகள் பேசியதாவது: அத்தியூர் திருக்கை கிராமத்தில் தாதாம்பாளைத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கள் இறக்குவதற்காக இங்கு வந்துள்ளார். ஒரு நபர் மட்டும்தான் கள் இறக்குகிறார். கிட்டத்தட்ட ஒருவேளைக்கு 10 குடம் கள் விற்பனை செய்கிறார்.
இயற்கையாக கிடைக்கும் கள்ளை ஒரு நபர், ஒரு நாளைக்கு ஒரு குடம் அல்லது 2 குடம் மட்டும்தான் இறக்க முடியும். ஆனால் முழுக்க முழுக்க சோப்பு தயாரிக்க பயன்படும் கிளாசிக் சோடா, பேஸ்ட் மாதிரியான பொருள், லெமன் சால்ட் மாதிரியான பொருட்களை வைத்து 10 குடம் கள் தயாரிக்கிறார். இது என்ன ரசாயனம் என்றே தெரியவில்லை. தொடர்ந்து ஒரு மாதமாக கள் விற்றுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்து தகவல் கேள்விப்பட்டு நாங்கள் இங்கு வந்தோம். ஏற்கனவே இங்கு கள் குடித்தவர்கள், எங்களிடம் வந்து அத்தியூரில் கள் குடித்தோம், வாந்தி எடுத்தோம், நாள் முழுவதும் தூக்கம் வருகிறது, போய் பாருங்கள் என்று சொன்னதன்பேரில் இங்கு வந்தோம். மண் கலையம் குறைந்த அளவே இருக்கிறது. ஆனால் அவற்றைவிட இருமடங்கு பிளாஸ்டிக் குடங்களில் கள் இருக்கிறது.
மருத்துவ குணம் செறிந்த, ஊட்டச்சத்து மிகுந்த கள் நற்பெயரை கெடுப்பதற்காக இப்படிப்பட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கலப்படம் செய்து கள் விற்று தீங்கு செய்யக்கூடாது. மரத்தில் இருந்த மண் கலசங்களை எல்லாம் இறக்கி விட்டோம். மற்ற ரசாயன பொருட்களை கைப்பற்றிக் கொண்டு செல்கிறோம். இங்கிருப்பவர்கள் இதுபோன்ற நபர்களை கள் இறக்க அனுமதிக்காதீர்கள். வந்தால் துரத்தி அடியுங்கள் என்றார். பின்னர் போலீசில் இதுதொடர்பாக பனையேறிகள் சிலர் முறையிட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கஞ்சனூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூரில் சட்ட விரோதமாக ரசாயன கள் தயாரித்து விற்பனை: தடுத்து நிறுத்தி அழித்த பனையேறிகள் appeared first on Dinakaran.