கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. சுமார் 20 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக உற்பத்தி செய்து தருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கூலி நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2017, 2022 ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காமல் கடந்த 2014ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கூலியை மட்டுமே வழங்கி வருவதாகவும், கூலியை உயர்த்தி வழங்கக்கோரியும் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த மாதம் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், இதர ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வந்தனர். இதனை ஏற்று விசைத்தறி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
The post விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.