சென்னை: விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் விரைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட நடிகை புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. சீமான் மீதான வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீசிடம் வழங்கினார். தொடர்ந்து சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டது.
ஆனால் வளசரவாக்கம் போலீசார் முன்பு விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராகவில்லை. ஆஜராவதில் இருந்து 4 வாரங்கள் அவகாசம் தருமாறு வழக்கறிஞர் மூலம் வளசரவாக்கம் போலீசில் சீமான் கடிதம் அளித்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக இன்று போலீஸ் முன் ஆஜராக இயலவில்லை என சீமான் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் விரைந்துள்ளனர். சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.
The post விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் விரைவு appeared first on Dinakaran.