சென்னை: அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பிப்.6 மற்றும் பிப்.7 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாரணையில், லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில், ‘விடாமுயற்சி’ திரைப்படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிப்.6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கோரப்பட்டது. அதன் அடிப்படையில், பிப்.6-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஒரு சிறப்புக் காட்சியை தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.