சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் திருச்சி – துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் மேம்பாடு மற்றும் அரசின் வருமான உயர்விற்காக வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அதானி சாலை போக்குவரத்து குழுமம் ரூ.1,692 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை தனியார்மய திட்டத்தின் மூலம் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒரே நாளில் 7.47 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உயர்வு பெற்று ஆதாயம் அடைந்துள்ளன. இத்தகைய பங்கு பரிவர்த்தனையினால் ஏற்பட்ட லாபத்தின் மூலம் அதானி குழும பங்குகளுக்கு ஏற்பட்ட உயர்வினால் உலகத்தில் உள்ள 20 கோடீஸ்வரர்களில் 73.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உயர்ந்துள்ளதாக ப்ளும் பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக அதானியை உயர்த்துவதினால் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் அடைந்த ஆதாயம் என்ன, பயன் என்ன, ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பாஜ அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின.
எந்த குற்றச்சாட்டை எவர் கூறினாலும் அதானி மீது எந்த விசாரணைக்கும் உட்படுத்தாமல் மோடி அரசு பாதுகாத்து வருகிறது. தம்மை மனிதப் புனிதராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, அதானி சொத்து குவிப்பின் மூலம் பா.ஜ பெற்ற ஆதாயம் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள். ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை அளித்திருந்தது.
ஆனால், இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்த மோடி அரசு தயாராக இல்லை. மோடியின் அதானி ஆதரவு நடவடிக்கை ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் தான் விளக்க வேண்டும் மோடி – அதானி கூட்டுக் கொள்ளைக்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் அதற்குரிய விலையை பிரதமர் மோடியும், பாஜவும் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
The post விமான நிலையங்கள், துறைமுகங்களை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் தனியார்மயம் 124 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது: செல்வபெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.