விருதுநகர்:விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 சிறுவர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் ஹரிஹரன் 27, பிரவீன் 22, மாடசாமி 37, ஜீனத் அகமது 27, ஆகியோரை மார்ச் 29 முதல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சோதனையிட்டு அவர்கள் பயன்படுத்திய அலைபேசி, லேப்டாப்களை தடயவியல் சோதனைக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் அனுப்பினர். கைதிகளின்
உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் குழுக்களில் உள்ள நபர்களிடமும் போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் கைதாகி மதுரை கூர்நோக்கு இல்லத்திலுள்ள 4 சிறுவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் சிறுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து டி.எஸ்.பி., வினோதினி தலைமையிலான குழுவினர் மதுரை காமராஜர் ரோடு கூர்நோக்கு இல்லத்திற்கு சென்றனர்.நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கூர்நோக்கு இல்ல காப்பாளர், சமூக நலக்குழு உறுப்பினர் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனியாகவும் குழுவாகவும் விசாரித்தனர். மாலை 4:45 மணிக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் மாடசாமி, ஜீனத் அகமது இருவரையும், விருதுநகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். மாடசாமியை போலீசார் அரைமணி நேரத்தில் பரிசோதனைகள் முடித்து அழைத்து சென்றனர். ஜீனத் அகமதுவிற்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.