*எதிர்பார்ப்பில் வியாபாரிகள், பொதுமக்கள்
புதுச்சேரி : வில்லியனூரில் கட்டி முடிக்கப்பட்டும் புதிய மீன் அங்காடி திறக்கப்படாமல் உள்ள நிலையில் அதனை விரைந்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி நகர் பகுதிக்கு அடுத்து மிகவும் பரபரப்பாக இயங்கும், வளர்ந்து வரும் பகுதியாக வில்லியனூர் உள்ளது. இங்கு அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, மார்க்கெட் போன்ற பல இடங்கள் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே காணப்படும்.
மேலும் மார்க்கெட் வீதியை வாகனங்கள் கடந்து செல்ல திக்குமுக்காடி வருகின்றன. இதனால் பலமுறை காவல்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தன. மேலும் சாலையை விரிவாக்கம் செய்து பழைய மீன் அங்காடியை இடித்து பல கடைகளுடன் மீன் அங்காடி கட்டவும் அரசு திட்டமிட்டது.
அதன்படி மீன் அங்காடி கட்ட வேலை நடந்ததால் மீன் வியாபாரிகள் வில்லியனூர் மாதா கோயில் வீதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த அங்காடி தற்போது கட்டிட பணிகள் நிறைவடைந்தும் அரசு சார்பில் திறப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. மேலும் அங்காடியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மீன் வியாபாரிகளும் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். மேலும் மீன் அங்காடியை விரைவில் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான சிவாவிடம் வலியுறுத்திள்ளனர்.
அவரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வரிடமும், துறை அமைச்சரிடமும் வலியுறுத்தியுள்ளார். எனவே அரசு உடனடியாக மீன் அங்காடியை திறந்து பயனாளிகளுக்கு உரிய கடைகளை ஒதுக்கித்தர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
The post வில்லியனூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மீன் அங்காடி திறப்பு எப்போது? appeared first on Dinakaran.