*40 இளம் வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளுடன் தரமான பயிற்சி வழங்க ஏற்பாடு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் இறகுப்பந்து அகாடமியை கலெக்டர் துவக்கி வைத்தார். இதில் 40 வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளுடன் பயிற்சிகள் தரமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் அப்பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு உயரிய நிலையிலான விளையாட்டு போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பதிவு செய்ய இயலும்.
அதனை கருத்தில் கொண்டு தகுதியான பயிற்றுநர்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் நியமனம் செய்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் – STAR (Sports talent advancement & recognition) அகாடமி உருவாக்கப்படும் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024-25ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் அமைத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இறகுபந்து விளையாட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் இறகுப்பந்து அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது: கொண்டு மாவட்டம் தோறும் குறிப்பிட்ட விளையாட்டுகளில் தகுதியான பயிற்றுநர்களை நியமித்து வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க, உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் ஸ்டார் இறகுப்பந்து அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்ட 20 வீரர்கள் மற்றும் 20 வீராங்கனைகள் பயிற்சி பெற உள்ளார்கள். வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்திட பயிற்றுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஸ்டார் இறகுப்பந்து அகாடமியில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய தரத்திலான சத்தான உணவுகளுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
விளையாட்டு சீருடைகள், விளையாட்டு காலணிகள், மாநில தேசிய போட்டிகளுக்கு செல்ல போக்குவரத்து செலவினம் ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் இந்த அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு சீருடைகள், காலணிகளை வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒலிம்பிக் அகாடமி கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆயவு செய்தார். இந்நிகழ்ச்சியில் கால்பந்து, தடகளம், இறகுப்பந்து பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் இறகுப்பந்து அகாடமி துவக்கம் appeared first on Dinakaran.