அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள வி.அகரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் 6-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், தன்னுடன் பயிலும் சக மாணவி ஒருவருடன் சண்டையிட்டு, கையால் அடித்துள்ளார். இதைக்கண்ட உடற்கல்வி ஆசிரியர் செங்கேனி சண்டையை தடுத்து நிறுத்தி, அந்த மாணவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.