சென்னை: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று (டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – புதுவை கடற்கரையை , புதுச்சேரி அருகில் இரவு 2230 -2330 மணி அளவில், கரையை கடந்தது.