விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்வதை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக விழுப்புரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் டாப் 10 ரயில் நிலைய வரிசையில் விழுப்புரம் 8வது இடத்தையும் பிடித்துள்ளது. தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் பெரும்பாலான ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்தே செல்கின்றன. கேரளா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் ஆந்திரம், கர்நாடகம் செல்லும் ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையம் வந்து செல்கின்ற மொத்தம் 117 ரயில்கள், விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் என 14 ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்பட்டு செல்கின்றன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் மூலம், தற்போது நாள் ஒன்றுக்கு ரூ5 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. எந்நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் விழுப்புரம் ரயில் நிலையம் காணப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே முண்டியம்பாக்கத்தில் கூட்ஸ் ரயில்கள் வந்து பொருட்களை ஏற்றி, இறக்கும் முனையமும் அமைந்துள்ளதால், கூட்ஸ் ரயில்களும் விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அம்ரீத் திட்டத்திலும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ28 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நகரும் நடைமேடை, லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதற்காக ஏற்கனவே இருந்த உயர்நடை மேடைகள் அகற்றப்பட்டுள்ளது.
இதனால் தற்போது 2, 3, 4, 5வது நடைமேடைகளில் வந்து நிற்கும் ரயில்களிலிருந்து இறங்கும் பயணிகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்வதை தவிர்க்க ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 4வது நடைமேடையில் வந்து நிற்கும் ரயிலில் இறங்கும் பயணிகள் தண்டவாளத்தில் குதித்து ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர். எனவே ரயில்வே இருப்புப்பாதை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இதுபோன்று ஆபத்தாக பயணிகள் கடப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்: அலட்சியமாக செல்கின்றனர்; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.