சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கு ரூ.200க்கு இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில: வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது 7,000- 8,000 என்ற அளவில் இருந்த இ- சேவை மையங்கள் தற்போது 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ்ஆப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அம்மா உணவகம், பேருந்து நிலையங்கள் என பொது இடங்களில் 3,000 இடங்களில் இலவச வை-பை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக சேவை வழங்குவதுபோல தமிழ்நாட்டில் 4,700 பஞ்சாயத்தில் இணைய சேவைக்கு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கும் என்னுடைய கணிப்புப்படி 100 எம்பிபிஎஸ் வேகத்தில் மாதம் ரூ. 200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
* இ-சேவை மையத்தில் அரசு பஸ் டிக்கெட்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘இ-சேவை மையம் மூலம் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது 28 இ-சேவை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. கிராமப்புறத்தில் 2 அல்லது 3 கி.மீ. தூரத்துக்குள்ளும், நகர்ப்புறத்தில் 1 கி.மீ. தூரத்திற்குள் இ-சேவை மையம் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
The post வீடுகளுக்கு ரூ.200க்கு ஹைஸ்பீடு இன்டர்நெட்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.