*எஸ்டிபிஐ கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை
நாகர்கோவில் : திட்டுவிளை நடுமார்த்தால் பகுதியை சேர்ந்த சனுஜா(34) என்பவர் எஸ்டிபிஐ நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியில் திட்டுவிளை நகர துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி வருகிறார். அவர் ரத்ததான சேவைகள், மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவுதல், பேரிடர் காலங்களில் தன்னார்வலராக பணி புரிதல் போன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் கண்டால் தெரியும் சீருடை அணிந்த ஒரு காவலரும் சேர்ந்து எனது கணவர் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்ததை அறிந்து எனது வீட்டில் மற்றும் நான் சார்ந்திருக்க கூடிய பகுதியில், எனது கணவரை குற்றவாளியை தேடி விசாரிப்பதை போன்று விசாரித்தது மட்டுமல்லாமல், எனது வீட்டிற்கு எவ்வித சம்மனும் இல்லாமல் வந்து, என்னை பெண் என்றும் பார்க்காமல் மிரட்டியதுடன், ஆபாசமாகவும் பேசிச்சென்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாகவும், சேவை ரீதியாகவும் செயல்பட்டு வரக்கூடிய எனது கணவர் குறித்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறை காவல்துறை வசம் முழுமையாக இருக்கின்ற பட்சத்தில், இந்த சட்ட விரோதமான விசாரணை ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. மேலும் இவர்களது விசாரணையால் எனது கணவர், கணவரின் தந்தை மற்றும் நான், எனது பிள்ளைகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளோம். ஆகையால் பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் கண்டால் தெரியும் சீருடை அணிந்த காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் இருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவேண்டும்.
The post வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.