சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி துவங்கி பூதங்குடி பகுதி வரை பரந்து விரிந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலகட்டங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்காலோடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு நீர் வரத்து வரும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தாகத்தையும் தீர்த்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி பருவ மழையால் பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வீராணம் வடக்கு நீர் போக்கி மூலமாக வெளியேற்றப்பட்டு, ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழை நீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.