புதுடெல்லி: தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம் என டெல்லி முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியின் ரோகினியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் அமைந்துள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குக்கு அருகே உள்ள இனிப்பகத்துக்கு எதிரே மர்மமான முறையில் நடந்த வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்தப் பிரசாந்த விஹார் பகுதியில் 2 மாதங்களில் 2-வது முறையாக இதுபோல சம்பவம் நடந்துள்ளது.