தருமபுரி: வாக்கரூ – ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் தருமபுரியில் நேற்று நடைபெற்ற ‘நற்சிந்தனை நன்னடை’ நிகழ்வில், வெற்றிகரமான, மகிழ்ச்சியான மனிதராக உருவாக நற்சிந்தனை அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கூறினார்.
பள்ளிப் பருவத்திலேயே சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நற்செயல்களைச் செய்துவரும் மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் வாக்கரூ – ‘இந்து தமிழ் திசை’ இணைந்து ‘நற்சிந்தனை நன்னடை’ எனும் நிகழ்வை நடத்தி வருகிறது. கோவை, திருச்சி, சென்னை மண்டலங்களில் நற்செயல்களில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நிகழ்வு தருமபுரி ரோட்டரி அரங்கில் நேற்று நடைபெற்றது. தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி, மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பள்ளிகளுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கி அவர் பேசியதாவது: நற்சிந்தனை கொண்ட மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், வாக்கரூ நிறுவனமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி வரவேற்புக்குரியது. மொத்தம் 19 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 27 பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்குவதைப் பாராட்டுகிறேன்.