உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸை இன்டர்போல் (சர்வதேச போலீஸ்) அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு அமைப்பு (இன்டர்போல்) பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு 8 நிறங்களில் நோட்டீஸ் வெளியிடுகிறது. ஒரு நாட்டில் தேடப்படும் நபரை வேறுநாட்டில் கைது செய்வதற்கு ரெட் நோட்டீஸை இன்டர்போல் வெளியிடுகிறது. காணாமல் போனவர்களை கண்டறிய மஞ்சள் நோட்டீஸூம், குற்ற விசாரணை தொடர்பாக குற்றவாளி பற்றி கூடுதல் விபரம் அறிய நீல நிற நோட்டீஸூம், அடையாளம் காணப்படாத உடல்கள் பற்றிய தகவல் அறிய கருப்பு நோட்டீஸூம், ஒருவரின் குற்ற நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுக்க பச்சை நிற நோட்டீஸூம், பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர் பற்றி எச்சரிக்கை விடுக்க ஆரஞ்சு நோட்டீஸூம் இன்டர்போல் அமைப்பால் வெளியிடப்படுகிறது. இதுபோல் பல தேவைகளுக்காக பல நிறங்களில் நோட்டீஸ்கள் வெளியிடப்படும்.