நெல்லை: கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரசை ஸ்ரீவைகுண்டம் அருகே நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய ரயில் நிலைய மேலாளர் ஜாபர் அலிக்கு ஒன்றிய அரசின் உயரிய விருதான ‘அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மதிப்புமிக்க ரயில்வே ஊழியர்களுக்கு ‘அதி விஷிஷ்ட ரயில் சேவா புரஸ்கார்’ என அழைக்கப்படும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 21ம் தேதி 69வது ரயில்வே விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடக்கிறது. இதில் தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை சாதனை படைத்த 8 பேருக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய மேலாளர் ஜாபர் அலி, கோட்ட மூத்த எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மஞ்சுநாத் யாதவ், சேலம் கோட்டத்தை சேர்ந்த பூபதிராஜா, சென்னை கோட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார், கிர்காரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், தெற்கு ரயில்வே தலைமையகம் நந்தினி ஜெகநாதன், பெரம்பூர் லோகோ ஒர்க்ஷாப் டிஜோ குரியாகோஸ் ஆகிய 8 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைய மேலாளர் ஜாபர் அலி கடந்தாண்டு டிசம்பர் 17, 18, 19ம் தேதிகளில் கனமழை, வெள்ளத்தின்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றியதால் விருது பெறுகிறார்.
The post வெள்ளத்தின் போது ரயிலை நிறுத்தி 800பேரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ரயில்வே மேலாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது: தெற்கு ரயில்வேயில் 8 பேருக்கு கவுரவம் appeared first on Dinakaran.