சென்னை: “திமுக அரசின் கீழ் நடக்கும் வேங்கைவயல் வழக்கு விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனிதக்கழிவை கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.