வேலூர்: வேலூரில் தினகரன் – விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர். இதனை டிஆர்ஓ மாலதி, விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தொடங்கி வைத்தனர்.
வேலூரில் தினகரன் நாளிதழும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சி விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சென்னை தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார் வரவேற்றார். விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் சிறப்புரையாற்றினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிமொழி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கி பேசுகையில், திங்கட்கிழமை பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்வை எதிர்கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும். விஐடி துணைத்தலைவரை போன்று நானும் அரசு பள்ளியில் படித்து பட்டப்படிப்பு முடித்தேன். தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். நீங்களும் இதுபோன்ற நிலைக்கு வரமுடியும்.
அரசு தேர்வுகளான குரூப் 1, குரூப் 2 மற்றும் பல துறை சார்ந்த தேர்வுகளை எழுதலாம். தேர்வுக்கான நேரம் குறைவாக உள்ளதால் நேரத்தை வீணடிக்காமல் படிக்கவேண்டும். `வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் வல்லுனர்கள் மற்றும் அனுபவசாலிகள் அளிக்கும் அறிவுரைகள் மற்றும் டிப்ஸ்களை கேட்டு பின்பற்றவேண்டும் என்றார். முன்னதாக விஐடி துணைத்தலைவர் சங்கர்விசுவநாதன் சிறப்புரையில் `இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மீடியம் என்று 50க்கு 50 சதவீதம் பேர் வந்துள்ளீர்கள். நானும் டிஆர்ஓவை போன்று அரசு பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவன்தான். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால், எந்த மீடியம் படித்தாலும் சிறப்பான முறையில், குறிக்கோளுடன் படித்தால் இதுபோன்ற இடங்களில் நீங்களும் சிறப்பு விருந்தினராக வரமுடியும். கல்வியில் கவனம் செலுத்தினால் நீங்களும் அப்துல்கலாம் போன்று சாதனையாளராக வரமுடியும். வெற்றி நமதே நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., பட்டப்படிப்புகள் நிறைய இருக்கு. அதேபோன்று விஐடியிலும் உண்டு. ஆனால் சீட் கிடைக்கவில்லையென்றால் அதற்கு சமமான வேறு படிப்புகள் உள்ளன. அவற்றை படித்தாலும் மாதம் ரூ.8 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரை சம்பாதிக்கலாம். விஐடியில் படித்த ஒருவர் தற்போது ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். எந்த படிப்பை படித்தாலும், ஊக்கமுடன் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு. இங்கு வந்துள்ள நீங்கள் சிறப்பான முறையில் பொதுத்தேர்வு எழுத வாழ்த்துகள் என்றார்.
தொடர்ந்து கருத்துரையாளர்கள் எளிய முறையில் படிப்பது, அதனை எப்படி படிப்பது, அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? என்று கருத்துகளை வழங்கினர். முடிவில் வேலூர் தினகரன் பொதுமேலாளர் தயாள் நன்றி கூறினார்.
The post வேலூரில் தினகரன்-விஐடி இணைந்து நடத்திய வெற்றி நமதே கல்வி நிகழ்ச்சிக்கு திரண்டு வந்த மாணவ, மாணவிகள்: டிஆர்ஓ, விஐடி துணைத்தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.