வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நீண்ட நேரம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பருவமழை சீசன் டிசம்பரில் விடைபெற்ற பின்னர், தமிழகத்தில் குளிர்கால சீசன் தொடங்கியுள்ளது. ஆனாலும், எப்போதும் இல்லாத வகையில் தை மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் வரை 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதல் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் குளிருடன் கடும் பனிமூட்டமும், பனிப்பொழிவும் காணப்படுகிறது.
காலை 9 மணிக்கு பிறகும் நிலவிய பனியால் வேலூர் மாவட்டத்தை கடந்து செல்லும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, சித்தூர்-கடலூர் சாலை என பிரதான நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி கிராமப்புற சாலைகளிலும் பனிப்போர்வை சூழ்ந்து வாகன ஓட்டிகளை கடும் அவதிக்குள்ளாக்கியது. வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்றன. இத்தகைய தட்பவெப்ப சூழலில் ஏற்படும் வறட்டு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றில் இருந்து தங்களை பொதுமக்கள் காத்துக் கொள்ள கம்பளி ஆடைகளை அணிவதும், உணவு விஷயத்திலும் மருத்துவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பதும் அவசியம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் உட்பட நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பொன்னை: காட்பாடி தாலுகா பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு நிலவியது. மூடுபனி காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 9மணிக்கு பிறகும் கடும் பனிப்பொழிவு நிலவியதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
The post வேலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.