கடலூர்: பேன்சி கடைக்கு முன் ஸ்டார்ட் செய்தபோது பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் மகன் லிங்கேஷ் (18). நேற்று இரவு இவர் ராமநத்தம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர் கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பைக்கை எடுப்பதற்காக வந்துள்ளார். பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யும்போது திடீரென பைக்கில் இருந்து தீப்பொறியுடன் புகை கிளம்பியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த லிங்கேஷ் பைக்கை விட்டுவிட்டு இறங்கி ஓடினார். உடனே பைக்கில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்குள் பைக் முழுவதும் எரிந்து நாசமானது. பைக்கில் தீப்பிடிக்கும் முன்பே லிங்கேஷ் இறங்கியதால் தப்பினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ஸ்டார்ட் செய்தபோது பைக் தீப்பற்றி எரிந்தது: வாலிபர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.