தமிழகத்தை ஒட்டியே இருந்தாலும் பெரும்பாலும் புதுச்சேரி மாநில அரசியலானது தமிழகத்தைவிட வித்தியாசமானது. தமிழகத்தில் திமுக, அதிமுக தான் பிரதான கட்சிகள். ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் தான் பிரதான கட்சியாக இருக்கும். இப்போது அங்கிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் பிரதானமாக இருக்கிறது. திமுக-வும் அதிமுக-வும் புதுச்சேரி அரசியலில் இரண்டாம்பட்சம் தான்.
புதுச்சேரியில் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இங்கு காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து ஜெயிக்க வைத்திருக்கிறது திமுக. இந்த நிலையில், அண்மையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராக இல்லை. 2026 தேர்தலில் திமுக 20 தொகுதிகளை கேட்டுப் பெறும். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று பேசியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.