வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை பதவியேற்ற நிலையில், அந்த விழாவில் பங்கேற்ற விஐபிகள், விருந்தினர்களின் நடவடிகைகளை நகைச்சுவை மீம்ஸ் ஆக்குவதில் சமூக ஊடக பயனர்கள் தீவிரம் காட்டினர். இதனால், ட்ரம்ப் பதவியேற்பு நாளில் எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள் மீம்களால் நிரம்பி வழிந்தது.
சந்தேகமே இல்லாமல் மீம்ஸ் மெட்டிரியலில் முதலிடம் பிடித்தது, அமெரிக்காவின் முதல் பெண்மணியும், ட்ரம்பின் மனைவியுமான மெலனியா ட்ரம்பின் பெரிய தொப்பியே. கிட்டத்தட்ட அது அவரின் பாதி முகத்தை மறைத்திருந்தது. அதன் பின்பு, மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என அறிவிக்கும் தனது முடிவை ட்ரம்ப் அறிவித்த போது, முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வெடித்துச் சிரிக்கும் வீடியோ மற்றும் மெட்டா சிஇஓ மார்க் ஸக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸின் வருங்கால மனைவி லாரன் சான்செஸை பார்ப்பது போன்ற வீடியோக்களும் மீம்களாகி சமூக ஊடகத்தை தெறிக்க விட்டன.