பூந்தமல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் சம்பவம் தொடர்பாக சினிமா இயக்குனர், சின்னத்திரை நடிகர் மாறிமாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஜோக்கர்’ படத்தை இயக்கி தேசிய விருது பெற்றவர் இயக்குனர் ராஜூமுருகன். இவர் சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஹேமா அந்த குடியிருப்பில் பாலியல் சம்பவம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குடியிருப்பு நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும், பராமரிப்பு தொகை அளிக்க முடியாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இயக்குனர் மனைவி ஹேமாவுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார். சின்னத்திரை நடிகர் விக்ரமன் பெண் வேடமிட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த புகாருக்கு ஆளான விக்ரமன் மற்றும் அவரது மனைவி பிரீத்தி ஆகிய இருவரும் வக்கீல்களுடன் நேற்றுமுன்தினம் இரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு சென்று, அவதூறாக இந்த வீடியோக்களை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த பேட்டியில், படப்பிடிப்பு சம்பந்தமான வீடியோ சமூக வலைதளத்தில் தவறாக பரப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த வீட்டில் நாங்கள் இல்லை.
வேறு வீட்டில் குடியிருந்து வருகிறோம். இதனை பிரச்னை ஆக்கியது யார் என்று தெரியவில்லை. வீடியோவை பரப்பியவர் மீது புகார் அளித்து உள்ளோம் என கூறினார். இயக்குனர் மனைவி வீடியோ வெளியிட்டு அளித்த புகாருக்கு எதிராக விக்ரமன் தரப்பினர் திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழிலா? சினிமா இயக்குனர் மனைவி, சின்னத்திரை நடிகர் மாறிமாறி புகார் appeared first on Dinakaran.