சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: தொழிலதிபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானியிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகிறது.