நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், வாக்கு எண்ணிக்கை மேலும் 6 நாட்கள் தாமதமாகும் என்கிறது தேர்தல் ஆணையம். எனினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது அவ்வப்போது எழும் அவநம்பிக்கைகளை முழுமையாகக் களைய வேண்டும் என்றால் எதிர்வரும் காலங்களிலாவது இன்னும் கூடுதலான வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு இணைப்பைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன. எனினும், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை மேம்படுத்தினால் போதும் என்று தெரிவித்திருந்தன. வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையில்லை, மீண்டும் வாக்குப் பெட்டி முறையையே கொண்டுவர வேண்டும் என்று கோரிவந்த எதிர்க்கட்சிகள், தங்களுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டது ஒப்புகைச்சீட்டு இணைப்பால் வாக்குப் பதிவைச் சரிபார்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால்தான்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு, தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இயந்திரங்களின் வருகையால், வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் எளிதாகியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றின் மீது பிரதானக் கட்சிகளே முழு நம்பிக்கை வைக்காதபட்சத்தில் வாக்களிக்கும் மக்களிடம் எப்படி நம்பிக்கையை எதிர்பார்க்க முடியும்? ஒப்புகைச்சீட்டுகளைக் கணக்கிடும் முறை 2017 முதல் இதுவரை 1,500 வாக்குச் சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவானதற்கும் இடையே எந்த வித்தியாசங்களும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, வாக்களிக்கும்போதே அது எந்தச் சின்னத்தில் பதிவாகிறது என்று வாக்காளருக்குக் காட்டும் வகையில், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களைப் பொருத்துவது ஒன்றே சரியான வழிமுறையாக இருக்க முடியும்.

தற்போது, ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் ஒப்புகைச் சீட்டில் பதிவான வாக்குகளும் ஒப்பிடப்படுகின்றன. 50% வாக்குச் சாவடிகளில் இப்படிச் சரிபார்ப்பது இயலாத காரியம் என்று தேர்தல் ஆணையம் கருதினால், கூடுதலாகச் சில வாக்குச் சாவடிகளிலாவது ஒப்புகைச்சீட்டுடன் கூடிய இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

தி ஹிந்து

 

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *