இந்தியா, சுற்றுப்புறம், விபத்து, விமர்சனம்

பட்டாசின் விபரீதங்கள் !!!

Fire crackers accidents

பட்டாசு  வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து ‘பட்டாசு’ கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..! அதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர். அப்படியே உலகம் முழுக்க புது வருடம் மற்றும் அவரவர் நாட்டு பண்டிகையில் வெடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றியது. இன்று உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவில், ஜனவரி 1 அதிகாலையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது..! நம் நாட்டை பொறுத்த மட்டில், தீபாவளியில்தான் பட்டாசு அதிகம்..!

ஆக, ‘பட்டாசு வெடித்தல்’ என்ற இந்த “அந்நிய மூடக்கலாச்சாரம்” பின்னர் எப்படியோ… இந்தியாவுக்குள் ஊடுருவி, அது எப்படியோ… தீபாவளி பண்டிகையில் மட்டும் படு விஸ்தாரமாக பெரிய துண்டை போட்டு ஜம்பமாக அமர்ந்து கொண்டு விட்டது. எனவே, தீபாவளி வரும்போது தான் பட்டாசு நம் நாட்டில் நிறைய விற்கப்படுகிறது. வாங்கப்படுகிறது. இப்படியாக, தீபாவளி பண்டிகையில் சிறிதும் சம்பந்தப்படாத இந்த பட்டாசை, இஸ்லாமிய, கிருஸ்த்துவ, சீக்கிய சமய சகோதர்களும் ஒரு ஜாலிக்காக வாங்கி வெடிக்கிறார்கள். ‘தங்கள் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள்’ என்று சப்பைக்கட்டு கூறி வாங்கியும் தருகிறார்கள்.

இந்த  பட்டாசு கேளிக்கையை தர, இதற்காக… “கந்தக பூமி” என்றழைக்கப்படும் சிவகாசி போன்ற ஊர்களில் சின்னஞ்சிறிய பிஞ்சுக்கரங்கள்  பட்டாசு செய்கின்றன. என்னதான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்று அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த சமூக அநீதி ஒருபுறம் நம் கண் முன்னே நமது மகிழ்ச்சிக்காக(?!) நடக்கத்தான் செய்கிறது. மேலும், பெண்களும் இந்த வேலையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இப்படி பட்டாசு செய்வோர் உடல் நிலை அதில் உள்ள ரசாயன நச்சுப்பொருட்களால் கெடுகிறது. மகப்பேறு பெற்ற மகளிர் எனில் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கிறது. பின்னர் அந்த பகுதி இந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் நிலத்தடிநீரையும் மண்ணையும் மாய்க்கிறது.அத்தோடு, இந்த ரசாயண நச்சு வாயுக்கள் காற்றையும் மாசுபடுத்தி பல்வேறு நோய்களை அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் சுகாராத சீர்கேட்டை கொடையாக அளிக்கிறது. நன்றாக நினைவில் நிறுத்துங்கள்! நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசும் பலரின் உடல்நலனை கெடுத்து விட்டுத்தான் நம் கைக்கு வந்து சேர்கிறது..!

பட்டாசை நாம் காசு கொடுத்து வாங்கி விட்டோம். இதனை எதற்கு வாங்கி இருக்கிறோம்..? வெடிக்க..! இப்போது நாம் இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும் நம்மில் எத்தனையோ வீடுகளில் இன்னும் சமையல் செய்ய அடுப்பெறிக்க விறகு வாங்க எரிபொருள் தேவைக்கு காசு இல்லாமல் பட்டினியால் இருக்கிறார்களே..! அவர்கள் வீட்டில் அடுப்பெறிவதை விடவா நமக்கு இந்த “காசை கரியாக்கும் கேளிக்கை” அவசியமாகப்போய் விட்டது..?

சரி, இவை பற்றி கவலை படாமல் வேடிக்கிறோம்..! இப்படி வெடிக்கப்படும் பட்டாசில் என்னவெல்லாம் வேதிப்பொருள் கலந்துள்ளன… அவை வெடித்த புகையாக, சாம்பலாக நிலத்திலும், நீரிலும், காற்றிலும் எப்படி கலந்து மாசு படுத்துகின்றன என்று எண்ணிபார்த்தோமா..?

ஆனால், இவ்வாறு திருக்கிடும் படியாக அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பது… வயோதிகர், பச்சிளங்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், தூங்குபவர்கள், பட்டாசு விரும்பாதோர்  இவர்களின்… அமைதியான சூழல் என்ற தனிமனித உரிமைக்கு எதிரானது அல்லவா..? ஏனெனில், சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் அன்றாடம் செவியுறுகிறோம். அப்படியிருக்க… தீபாவளியில்…  100, 130 டெஸிபல் அளவுக்கு வெடிச்சத்தம் கிளப்புவதற்கு நாம் எப்படி தனிமனித உரிமை பெறுவோம்..? கொஞ்சமேனும் மனித நேயம் வேண்டாமோ..? பிறர் நலம் பேண வேண்டாமா..?

நமக்கு வெடிக்க இருக்கும் அதே உரிமை, அமைதியை விரும்புவதற்கும் அவர்களுக்கு உண்டு அல்லவா..? “125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்” என்ற சட்டம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? முதலில் இதை அமல்படுத்துவோருக்காவது தெரியுமா..?

இந்த பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.

உலகின்  பல நாடுகள் பட்டாசு வெடிக்க தடை போட்டுள்ளன..! ஏன்..?

ஆண்டிமோனி சல்பைடு, ஆர்செனிக், பேரியம் நைட்ரேட், காப்பர் காம்பவுண்ட், ஹெக்சா குளோரோ பென்சின், லெட் காம்பவுண்ட், லித்தியம் காம்பவுண்ட், மெருகுரஸ் குளோரைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைட், ஓசோன், சோடியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்குலோரெட், பொட்டாசியம் குளோரேட், பொட்டாசியம் நைட்ரேட், ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை எல்லாமே சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன.

இவற்றை சுவாசிப்போருக்கு… சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு.. என்று  இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது. முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கவே முடியாது.

நகரெங்கும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து, என நீக்கமற நிறைந்து எங்கும் பரவிக்கிடக்கும் இந்த பட்டாசுக்குப்பைக்கழிவுகளை தீபாவளியின் மறுநாள் காலை மலையளவு வேலையாக அவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள். அனைத்தும் நச்சுக்குப்பைகள் என்று அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே… அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி சிந்தித்துப்பாருங்கள்.

firecrackers waste
சில சமயம் தீபாவளி அன்று இரவு மழை பெய்தாலோ கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது. பட்டாசு வெடித்தபின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க… நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு..! பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள்.  நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.
பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசு-படுத்துகின்றன. தீபாவளி அன்றைக்குக் காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படிச் சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்தப் புகைமூட்டம் எப்படி உங்களைப் பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும். எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்தப் புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்கா-விட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளைத் தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பதக் காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்

நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.

மேற்கண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்-படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.

ஆட்டம் பாம் – 145 டெசிபல், சரவெடி – 142 டெசிபல், தண்டர்போல்ட் – 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் – 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் – 122 டெசிபல்

இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு-பாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்-படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசு-களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடிய-போது, “இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை” என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்-பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள்.

குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

ஆனால் 100, -150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை. பூவுலகின் நண்பர்கள் அளித்த இந்தத் தகவலுடன் இன்னொரு தகவலும் தீபாவளி நாளைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (05-11-2010) படிக்கநேர்ந்தது. தீபாவளிப் பட்டாசு ஓசைகளால் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டு விலங்குகள்தானாம். நாய், பூனை, மாடு, ஆடு, முயல் உள்ளிட்ட வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக ஒலியினால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. அதாவது, மனிதர்களின் காது கேட்கும் ஒலித் திறனைவிட இவைகளின் காது கேட்கும் ஒலித் திறன் மிகவும் நுண்ணியமானது. எனவே, அதிக ஒலியை அவை தாங்காது. அச்சத்தில் உடல் நடுக்கம் ஏற்படுமாம்; நாய்கள், ஒலியைக் கேட்டமாத்திரத்தில் எங்காவது அமைதியான இடம்தேடி ஓடிவிடுகின்றனவாம். தீபாவளிக் காலங்களில், தான் இருந்த இடத்திலிருந்து வேறு இடத்திறகு ஓடிச் சென்று மீண்டும் தன்னுடைய இடத்திற்கு வரும் வழிதெரியாமல் திரியும் நாய்கள் அதிகம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்கு-களையும் விட்டுவைக்கவில்லை தீபாவளி. தீபாவளி வந்துவிட்டாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது. சூழல் கேட்டை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாக இந்தப் பட்டாசுகள் இருக்கின்றன.ஒலி மாசையும்,சுற்றுச் சூழல் மாசையும் ஒருசேரக்கெடுக்கும் தீபாவளிப் பட்டாசுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருவதுபோல் தெரிகிறது.சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்-களாலும் மாற்றம் தெரிகிறது.இந்த ஆண்டு பட்டாசின் விலைகள் அதிகரித்ததால் பட்டாசுச் சத்தம் சற்றுக் குறைந்ததை சென்னையில் உணரமுடிந்தது. என்றாலும், பணம் படைத்தவர்கள், மார்வாரிகள், புதுப் பணக்காரர்கள் தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்ள பட்டாசை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி கொளுத்தினார்கள்.நாம் மேற்சொல்லிய தகவல்கள் வெகு மக்களின் காதுகளை எட்டும்-போது ஏதாவது உருப்படியான பலன்கள். ஏற்படலாம். ஆனால், இதையெல்லாம் எந்த ஊடகமும் சொல்வதில்லை; மாறாக அவை தீபாவளி மலர்களின் மூலமும்,சிறப்பு நிகழச்சிகளின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றன. தங்களின் கல்லாவை நிரப்ப அவர்களுக்கு தீபாவளி ஒரு கருவி அவ்வளவுதான்.மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது.

சரி, இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்… அப்பப்பா… சொல்லி மாளாதே..! கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்… என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..? இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?

பாத்தீர்களா! பட்டாசு வெடிப்பதால் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்கிறோம்…? நம்மை நாமே அழித்துக்கொள்வதுடன், நாம் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்களையும் அல்லவா சேர்த்து அழிக்கிறோம்..? மென்மையான தற்கொலையும் மென்மையான கொலையும் போலல்லவா இது உள்ளது..? இப்பேர்பட்ட பாவத்தை செய்ய வைக்கும் இந்த பட்டாசு நமக்கு அவசியமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *