ஆரோக்கியம், கட்டுரை, சிந்தனைக் களம்

புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா?

சிகரெட் அட்டைப் பெட்டி மீதான எச்சரிக்கைப் படத்தைப் பெரிதாகக் கண்ணில்படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனைக்கு, எதிர்பார்த்ததுபோலவே எல்லா புகையிலை நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அரசின் இந்தப் புதிய விதியை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு வர சில வாரங்கள் பிடிக்கும். அதுவரையில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி, புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகளைச் சித்தரிக்கும் படங்களை அட்டையின் 85% இடத்தில் அச்சிட வேண்டும். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையெல்லாம் அறிவியல்பூர்வமாக முறியடிக்க முடியாத புகையிலை நிறுவனங்கள், அவற்றைப் பற்றிப் பேசாமல், இந்த முடிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று போலியாகக் கரிசனம் காட்டுகின்றன.

சிகரெட் விற்பனையைக் குறைப்பதில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முன்மாதிரியாக இருக்கின்றன. இன்ன பிராண்டு சிகரெட் என்பதைக்கூட அட்டையில் அச்சிட முடியாமல் ஆஸ்திரேலிய அரசு தடுத்துவிட்டது. பிரான்ஸ், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளில் எதிர்காலத்தில் சிகரெட் பெட்டிகளில் பிராண்டு பேரோ, படமோ, சின்னமோ, சிகரெட்டைப் பிடிக்கத் தூண்டும் வாசகங்களோ இடம்பெறாது. மாறாக, சிகரெட் பிடிப்பதால் வாயில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்கள் எச்சரிக்கும் விதத்தில் வண்ணத்தில் அச்சிடப்படும். 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இப்படி எச்சரிக்கைப் படங்கள், வாசகங்களுடன் சிகரெட் அட்டைகளை அச்சிட ஐரோப்பிய நீதிமன்றம் ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதற்கும் முன்னதாக சிகரெட்டின் தரம், சுவை பற்றிய ‘லைட்’ மற்றும் ‘மைல்ட்’ என்ற வாசகங்களை நீக்குமாறு கட்டளையிட்டது.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் கல்லூரியில் படிக்கும் காலத்திலோ, வேலைக்குப் போகத் தொடங்கும் காலத்திலோ ஏற்படுகிறது. அதில் சுவை ஏற்பட்டவுடன், உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும் கைவிட முடியாமல் தவிக்கிறார்கள். சிகரெட்டைப் பிடிக்க வைப்பதில் அது தொடர்பான விளம்பரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்துடன் திரைப்படங்களில் கதாநாயகன் அல்லது வில்லன் முக்கிய கட்டங்களில் சிகரெட்டை ஸ்டைலாகப் பிடிப்பதைப் பார்த்து தாங்களும் அப்படியே பாவனை செய்யப்போய், சிகரெட் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிகரெட் எரியும்போது கிளம்பும் புகையில் உள்ள நறுமணமும் புகைப் பழக்கத்துக்குப் பலரை ஈர்த்துவிடுகிறது. தங்களுடைய மன இறுக்கத்தை சிகரெட் பிடிப்பதன் மூலம் தளர்த்திக்கொள்வதாகப் பலர் தவறாக நினைக்கிறார்கள். மேலும் பலர், புத்துணர்ச்சிக்கு சிகரெட் உதவுகிறது என்று கற்பனை செய்துகொள்கிறார்கள். உண்மையில், சிகரெட் அப்படி எதையும் செய்துவிடுவதில்லை. சிகரெட்டால் செய்ய முடிவதெல்லாம் உடல் நலத்துக்குக் கெடுதல்தான். சிகரெட் நிறுவனங்களின் பெயர்கள், வாசகம் போன்றவை இல்லாமல் வெறும் வெள்ளை நிற அட்டைப்பெட்டியில், கறுப்பு நிற எச்சரிக்கை வாசகத்தை அச்சடித்து விற்கத் தொடங்கியவுடனேயே விற்பனை சரியத் தொடங்கியுள்ளது. புகையிலை சிகரெட்டுக்கு மாற்று என்று கூறி ‘ஈ-சிகரெட்’டை அறிமுகப்படுத்தினார்கள். அது புகையிலை சிகரெட்டை ஒரேயடியாக வெளியேற்றிவிடவில்லை என்றாலும், நாளடைவில் அவர்கள் மீண்டும் புகையிலை சிகரெட்டுக்குத் திரும்பவே உதவும் என்று உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் திரைப்படக் காட்சிகளில் சிகரெட் வரும்போதெல்லாம் எச்சரிக்கை வாசகங்கள் தவறாது இடம்பெறுகின்றன. அதே சமயம், பல சிகரெட் நிறுவனங்கள் – மது நிறுவனங்களும்கூடத்தான் – சிகரெட்டைப் பிடிக்கத் தூண்டும் விளம்பரங்களை சிகரெட்டைக் காட்டாமலேயே செய்கின்றன. இதற்குத் தடை விதிக்க வேண்டும். சில மது விளம்பரங்கள் மது பாட்டிலைக் காட்டாமல் சோடா பாட்டிலை மட்டும் காட்டி பூடகமாக விளம்பரப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றத்தில் வெற்றி கிடைத்துவிட்டது என்று இந்திய அரசு இத்துடன் இந்தப் பிரச்சாரத்தை கைவிடக் கூடாது.

இப்போது சிகரெட் உற்பத்தியாளர்கள் உலக வர்த்தக நிறுவனத்தை நாடியிருக்கிறார்கள். தங்களுடைய தொழிலுக்கு மட்டுமல்ல, புகையிலைச் சாகுபடிக்கும் இது ஆபத்து என்று முறையிட்டுவருகிறார்கள். அந்த அமைப்பு அவ்வளவு விரைவில் உண்டு, இல்லை என்று முடிவை அறிவித்துவிடாது. இந்த இடைவெளி அதிகமாக இருப்பது ஒருவகையில் நல்லது. ஏனென்றால், தீவிர புகையாளர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டுவிடலாம். புகைபிடித்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை உலக நாடுகள் தளர்த்திவிடக் கூடாது. பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உள்ள தடையைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய உள் வட்டத்துக்குள் உள்ளவர்களையும் காப்பாற்றியாக வேண்டிய அவசியம் சமூகத்துக்கு இருக்கிறது.

-நன்றி தி இந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *