ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி சமயத்தில் நடந்தது இது. ஜூன் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது குறித்து என்னிடம் பேசிய டாக்ஸி ஓட்டுநர், “எல்லைக் கோட்டில் நம் வீரர்களைக் கொன்று, தலையை வெட்டும் பாகிஸ்தானுக்குப் பதிலடி தரும் வகையில் கிரிக்கெட்டில் நாம் நல்ல பதிலைத் தந்துவிட்டோம்” என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “கடந்த காலத்தில் பலமுறை பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறதே” என்றேன். “ஆமாம், சில வேளைகளில் அவர்கள் (இந்திய அணி) நம்மைக் கைவிட்டுவிடுகிறார்கள்” என்று சலிப்போடு பதில் அளித்தார் அவர்.
வெற்றியைக் குறிக்கும்போது ‘நாம்’ என்றார், தோல்விக்குக் காரணம் ‘அவர்கள்’ என்றார். இதன் மையம் எளிமையானது. வெற்றி, வளம், நல்ல செய்திகள் என்றால் அதை நமதாக்கிக் கொள்ள விழைகிறோம். மோசமான முடிவுகள், தோல்விகள், செய்திகள் என்றால் ஒதுக்க விரும்புகிறோம். இதே அடிப்படையில்தான் நல்ல செய்திகளைக் கூறுகிறவர்களை, பெருமைப் படத்தக்க சாதனைகளைச் செய்வோம் என்று மார் தட்டுகிறவர்களை விரும்புகிறோம். உளவியலாளர்கள் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, இப்படிப் பேசுபவர்களை மக்கள் விரும்புவது இயல்பு என்று கூறுகின்றனர்.
பெருமைப்பட என்ன இருக்கிறது?
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள், தேசப் பாதுகாப்பு என்ற முக்கிய அம்சங்களில் சாதனை என்று சொல்லிக்கொள்ள எதையுமே இந்த அரசு செய்துவிடவில்லை. இருந்தாலும் பிரதமர் மோடிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவிடவில்லை. இதற்கென்ன காரணம்? தேசியப் பெருமிதத்தை, சாமானிய மக்களுடன் இணைத்து மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கியதில்தான் மோடியின் – பாஜகவின் வெற்றி இருக்கிறது.
எந்த ஒரு சூழலையும் ஆக்கப்பூர்வமானதாகத் திரிக்கும் மோடியின் ஆற்றல் ஈடு இணையற்றது. வறுமையின் சாபத்தை மோடி எப்படி வெறும் வார்த்தை ஜாலங்களால் மாற்றினார் என்று பாருங்கள். “ஏழைகளிடத்திலே அளவற்ற ஆற்றல் பொதிந்து கிடப்பதைப் பார்க்கிறேன்; அவர்கள் இந்த நாட்டின் வலிமை” என்றார் மோடி.
உற்சாகமான மனநிலையை ஏற்படுத்துவதற்கு மூன்று அடிப்படையான வழிகளை பாஜக கடைப்பிடிக்கிறது. வாழ்க்கையின் அன்றாட அவல வாழ்க்கைக்கு நடுவில் மகிழ்ச்சியான செய்தி எதையாவது கேட்டு பரவசப்பட நினைக்கும் சாமானியர்களுடன் தனது பிரச்சாரம் மூலம் வெற்றிகரமாக இணைந்துவிடுகிறது. பாஜகவின் அரசியல் பட்டறையில் மகோன்னதம், வளர்ச்சி என்ற வார்த்தைகளே ஆயுதங்களாக உருவாகின்றன. ‘அச்சே தின்’ (நல்ல நாட்கள்) வரும் என்ற வாக்குறுதியே தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து 2014-ல் மோடியைப் பிரதமராக்கியது.
‘இந்தியா ஒளிர்கிறது’ என்று வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சொல்லப்பட்ட வாக்குறுதி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள உதவவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் அப்படிப் பேசுவதைக் கைவிடவில்லை.
மக்களை உத்வேகப்படுத்த, பழிவாங்க வேண்டும் என்ற மொழியைக்கூடப் பயன்படுத்துகிறது பாஜக அரசு. யூரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, பழிவாங்குவதற்காகத் துல்லிய தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. பாகிஸ்தானின் அனைத்துத் தாக்குதல் முயற்சிகளுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று கோஷமிட்டது. ‘ஒரே பாதை – ஒரே பிரேதசம்’ என்ற சீனத்தின் திட்டத்தை ஏற்க மறுத்து, சீன ஆதிக்கத்துக்கு அடி பணியமாட்டோம் என்று மக்களைப் பெருமை கொள்ள வைத்தது. இதற்கு முந்தைய அரசுகளும் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் இப்போதைய அரசு அதைச் சொல்வது, வலிமையான பிரதமரின் கீழ் நாடு வலுவாக இருப்பதை வாக்காளர்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
மிகுந்த துயரத்தை விளைவித்த, எதிர்பார்த்தபடி பலனைத் தருவதற்குப் பதிலாக இழப்பையே ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் போன்ற முன்யோசனையற்ற நடவடிக்கைகளைக் கூட, நாட்டு மக்களின் தியாகத்தை வெளிக்கொண்டு வந்ததாகச் சித்தரித்து விமர்சிக்க முடியாமல் அடக்கிவிட்டது.
‘அச்சே தின்’ அமலாக்கம்!
நாட்டின் பழமையான மகோன்னத நிலை, சாதனைகள், பழிவாங்க வேண்டிய அவசியம் ஆகியவற்றைத் தேனொழுகப் பேசி மக்களை மயக்கி, தாங்கள் செய்வதெல்லாம் நாட்டின் நன்மைக்காகத்தான் என்ற சாதகமான புறச்சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர். மிகச் சிறந்த விளம்பர இயக்கம் போல இது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விவரங்களைச் சொல்வதுடன் உங்களையும் ஒரு பங்கேற்பாளராக உள்ளே இழுத்துவிடுகிறது. பங்கேற்கத் தொடங்கிய பிறகு நீங்களே பிரச்சாரகராக மாறுகிறீர்கள். சரக்கு மோசம் என்று தெரிந்தாலும் அதை ஏற்க வேண்டியது ஏன் என்று நீங்களே சமாதானம் சொல்லத் தொடங்குகிறீர்கள். சில சமயங்களில், தீவிரமாக ஆதரித்துக் கூடப் பேச முற்படுகிறீர்கள். இது சாதாரண மனிதர்களின் இயல்பு. 2014-ல் மோடியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு ஆதரித்தவர்கள் கூட, சொன்னதெல்லாம் தேர்தலுக்காகத்தான் என்று உணர்ந்து கொண்டாலும் ஆதரவு நிலையைவிட்டு விலகிவரத் தயங்குகிறார்கள். மகோன்னதமான பழைய காலம், முன்னேறிச் செல்ல வேண்டிய கட்டாயம் என்ற மனநிலையிலிருந்து விடுபடுவது எளிதல்ல. பாஜக அத்தோடு விடாமல், தேசத் துரோகம் பற்றியும் பேசி மக்களுடைய மனங்களை மாற்றியிருக்கிறது. நாட்டில் நடப்பவற்றை விமர்சித்தால் ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்தப்படுகிறீர்கள். இதனாலேயே விமர்சிக்கக்கூட தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
‘அச்சே தின்’ வரும் என்பதெல்லாம் நம்ப வைப்பதற்கான உத்திதான். ஆனால் அதை ஏற்க மறுப்பது தீமையில்தான் முடியும். பாஜக அல்லாத கட்சிகள் உற்சாகத்தை ஊட்டும் பேச்சுக்கலையைப் புறக்கணித்தன. அவர்களுடைய பிரச்சாரங்களின் பெரும்பகுதி “நம் நாட்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லை, நம்மால் செயல்படுத்த முடியாது, நாம் மூன்றாவது உலகைச் சேர்ந்த ஏழை நாடு” என்ற அவலமே எஞ்சி நிற்கிறது. இடதுசாரி கட்சிகள் காங்கிரஸையும் பாஜகவையும் சகட்டு மேனிக்கு வசைபாடுகின்றன, ஆனால் நாட்டை முன்னேற்ற மாற்று திட்டங்களை வலிமையுடன் முன்வைக்கத் தவறுகின்றன.
ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அவசியம். ஆனால் அதில் ஆக்கப்பூர்வமான கருத்துகளோ, மாற்று திட்டங்களோ, உற்சாகம் தரும் உத்திகளோ கிடையாது. ஒரு குடும்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டு, தான் நடத்தும் அரசியலாலும் ஊழல் மிகுந்த தலைவர்களாலும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. இடதுசாரிகளான சுதந்திரச் சிந்தனையாளர்களும் எதற்கெடுத்தாலும் விமர்சனம் என்று, அளவுக்கு மிஞ்சி சிடுமூஞ்சிகளாகிவிட்டார்கள். இடதுசாரிகள் ஏன் துளியும் நம்பிக்கையில்லாமல், எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வாட்ஸப்பில் ஒருவர் அங்கலாய்த்திருந்தார்.
எவ்வளவு நாளைக்குத்தான் உற்சாகச் செய்திகளை மட்டுமே மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதும் ஆராய வேண்டியதுதான். முந்தைய காலத்தில் நாம் அசகாயசூரர்களாக இருந்தோம் என்ற கற்பனைக் கதைகளின் கவர்ச்சியெல்லாம் நாளடைவில் தேய்ந்துபோய்விடும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரமே எப்படி எரிச்சலைக் கிளப்பி பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பது 2004-ல் நாடு பார்த்த வரலாறு. குறிப்பிட்ட ஒரு கட்டத்தில், பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாவது, வாழ்க்கையை நடத்த முடியாதபடிக்கு விலைவாசிகள் ஏகமாக உயர்வது எல்லாம் மக்களை நனவுலகத்துக்கு இழுத்துவிடும். அதுவரையில் பாஜகவின் உத்தியிலிருந்து ஒன்றிரண்டை எதிர்க்கட்சிகளும் கைக்கொள்வது அவர்களுக்கு நன்மையைத் தரும். மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள், ஆக்கப்பூர்வமான மாற்று திட்டங்களை முன் வையுங்கள்.
(கட்டுரையாளர் ஜவாஹர்லால் நேரு
பல்கலைக்கழகப் பேராசிரியர்)