புதுடெல்லி: தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இன்று முதல் அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் சமரசம் ஏற்பட்டிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இதில் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு குறித்தும், மணிப்பூர் இனக்கலவரம், உபி மாநிலம் சம்பலில் நடந்த கலவரம் குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதுதொடர்பாக அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தும் அவை ஏற்கப்படவில்லை. இதனால், கடும் அமளி காரணமாக முதல் நாளில் இருந்து எந்த அலுவலும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கி இருக்கிறது. இந்நிலையில், வார விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும், அதானி விவகாரத்தில் விவாதம் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். கேள்வி நேரத்தை தொடங்கிய சபாநாயகர் ஓம்பிர்லா, உறுப்பினர்கள் தங்கள் கேள்விகளை கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டபடி இருந்ததால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவை தொடங்கிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை கூடியதும், அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், 20 ஒத்திவைப்பு தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவையில் அதானி, சம்பல் மற்றும் மணிப்பூர் குறித்து கடும் அமளி தொடங்கியது. கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சியினரை அவைத்தலைவர் கேட்டுக் கொண்டார். திமுக எம்பி திருச்சி சிவா கேள்வி எழுப்ப தயாராக எழுந்து நின்ற நிலையில், அமளி நீடித்ததால் அவைத்தலைவர் தன்கர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் தொடர்ந்து 6வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி உள்ளன. இதற்கிடையே, அவை முடக்கத்திற்கு நடுவே மக்களவை சபாநாயகர் அறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்பிக்கள் கே.சி. வேணுகோபால், கவுரவ் கோகாய், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த கிரண் ரிஜிஜூ, ‘‘அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதன் 75ம் ஆண்டு விழாவையொட்டி, இரு அவையிலும் அரசியலமைப்பு குறித்து விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, மக்களவையில் வரும் 13, 14ம் தேதியும், மாநிலங்களவையில் வரும் 16, 17ம் தேதியும் விவாதம் நடத்த முடிவாகி உள்ளது. மேலும், அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர். இதனால் நாளை (இன்று) முதல் அவை சுமூகமாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார். கூட்டத்தில் பங்கேற்ற சில எதிர்க்கட்சி எம்பிக்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். அதானி விவகாரத்தில் விவாதம் நடத்துவது குறித்து விதிமுறைப்படியே முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
* கப்பல் போக்குவரத்து மசோதா தாக்கல்
மக்களவையில் நேற்று கடும் அமளிக்கு நடுவே கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவை ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தாக்கல் செய்தார். இந்த மசோதா, நாட்டின் கடலோர பகுதிகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், தேச பாதுகாப்பு மற்றும் வணிக தேவைகளுக்காக இந்தியர்களுக்கு சொந்தமான மற்றும் இந்திய கொடியுடன் இயக்கப்படும் கப்பல்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் வகை செய்கிறது.
* மக்களின் கேள்விகளை பாஜ அரசு மதிக்கவில்லை
டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் இரு தரப்பும் பரஸ்பரமாக ஒத்துழைக்க வேண்டும். நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகள் குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாய் திறக்காமல் எதிர்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பானதாகும். ஆளும் கட்சியான பாஜ பதில் அளிக்க மறுப்பது மட்டுமல்லாமல், யாரையும் மதிப்பது கிடையாது. நாடாளுமன்றத்தின் ஜனநாயகம், மக்களின் கேள்வி ஆகியவைகளுக்கு ஒன்றிய அரசு மதிப்பு அளிக்காமல் அதற்கு எதிராக செயல்பட்டு வருகின்றது’’ என்றார்.
* பயந்து ஓடும் அரசு தான் அவை முடங்க காரணம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இன்றும் இரு அவைகளும் முடங்கி உள்ளன. அதானி, மணிப்பூர், சம்பல், அஜ்மீர் தர்கா ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் நடத்த இந்தியா கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. இந்த கட்சிகள் ஒருபோதும் கூச்சலிடவில்லை. கோஷமிடவில்லை. ஆனால் நாடாளுமன்றம் இயங்குவதை மோடி அரசு விரும்பவில்லை. உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்புகின்றன. அரசு பயந்து ஓடுகிறது. அதனால் அவர்களே அவையை நடத்த விடாமல் ஒத்திவைக்கின்றனர். இந்த முடக்கம் அரசால் மட்டுமே ஏற்படுகிறது’’ என்றார்.
The post அதானி, சம்பல் கலவரம் விவகாரங்களால் கடும் அமளி நாடாளுமன்றம் 6வது நாளாக முடங்கியது: இன்று முதல் அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டதாக தகவல் appeared first on Dinakaran.