ரேபரேலி: ‘அதிகாரத்தை அடைய வேண்டுமானால் ஆங்கிலம் படிப்பது அவசியம்’ எனக் கூறிய ராகுல் காந்தி, ‘கல்வியால் மட்டுமே உரிமைகளை பெற முடியும்’ என அறிவுறுத்தினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான உபி மாநிலம் ரேபரேலிக்கு நேற்று காலை சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ராகுல் காந்தி, பர்காட் சவுராஹா பகுதியில் மூல் பாரதி விடுதியில் உள்ள தலித் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் தலித்கள் உள்ளனர். ஆனால், இங்குள்ள பெரிய தனியார் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் யாருமில்லை. உங்களுக்கு எதிராக ஒரு முழு அமைப்பும் உள்ளது. அது நீங்கள் முன்னேற விரும்பவில்லை. உங்களை தினமும் தாக்குகிறது. பாதி நேரம் அது உங்களை தாக்குவதை நீங்கள் அறியவே மாட்டீர்கள். அம்பேத்கருக்கு எந்த வசதியும் இல்லை. ஆனால் அவர் தனது சொந்த முயற்சியின் மூலம் நாட்டின் அரசியலையே அதிர வைத்தார். இந்த அரசியலமைப்பின் மூலம் தலித்களுக்கு அவர் அதிகாரத்தை வழங்கினார். இது உங்களின் அரசியலமைப்பு.
ஆனால், உங்களுக்கு எதிரான அமைப்பால் நீங்கள் எங்கு சென்றாலும் ஒடுக்கப்படுகிறீர்கள். அரசியலமைப்பை ஒழிக்க சதி நடக்கிறது. அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கல்வியால் மட்டுமே நமது உரிமைகளை பெற முடியும். அதனால் தலித்கள் கல்வி அறிவு பெற வேண்டுமென அம்பேத்கர் விரும்பினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மக்கள் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி பேச வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் நீங்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டால், எங்கு சென்றாலும் எந்த நிறுவனத்திலும் வேலை செய்யலாம். பா.ஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆங்கிலம் கற்கக் கூடாது என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் ஆங்கில மொழியைக் கற்றால் தமிழ்நாடு செல்லலாம், ஜப்பான், மும்பை என எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
அதனால் தான் நீங்கள் ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இந்த மொழி எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகள் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆங்கிலம் படிப்பதுதான் உங்களின் மிகப்பெரிய ஆயுதம். இந்தியும் முக்கியம் தான்.
அது உங்களின் வேர் மொழி. அதை விட ஆங்கிலம் மிகவும் முக்கியம். இந்தியில் பேச வேண்டும் என்று கூறும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்கிறார்கள். இங்கிலாந்து சென்று கூட படிக்கிறார்கள். ஆங்கிலம் கற்றுக்கொண்டால், ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்கு செல்ல முடியும். அங்கு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகள் நுழைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே ஆங்கில மொழியை உங்களின் மிகப்பெரிய ஆயுதமாக அணுகுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
* கூட்டணிக்கு அழைப்பு: மாயாவதி மறுப்பு
உபி முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘‘பாஜவுக்கு எதிராக மாயாவதி எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ஏதோ காரணத்தால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இது மிகவும் ஏமாற்றமளித்தது. உபியில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தால், பாஜ ஒருபோதும் வெற்றி பெற்றிருக்காது’’ என்றார். இதற்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்த மாயாவதி, ‘‘காங்கிரஸ் வலுவாக உள்ள அல்லது அதன் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், பகுஜன் சமாஜ் கட்சியையும் நிர்வாகிகளையும் விரோதியாகவும் சாதிய மனப்பான்மையுடனும் பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் பலவீனமாக உள்ள உபியில் கூட்டணிக்கு அழைப்பது ஏமாற்றும் பேச்சு. இது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாடு இல்லாமல் வேறென்ன?’’ என்றார்.
* இது அன்பின் நாடு
ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘சாதி ரீதியாக ஒருவருக்கொருவர் மோதலை தூண்டி, ஒரே மதம், ஒரே மொழி என தேசத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளை மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இது அன்பின் நாடு. வெறுப்புக்கு இடமில்லை’’ என்றார்.
The post அதிகாரத்தை அடைய வேண்டுமானால் ஆங்கிலம் படிப்பது அவசியம்: ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.