அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன. இதில் சியாட்டிலில் உள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட இருக்கிறது.
அதிபர் ட்ரம்பின் முடிவு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறும்போது, “பிறப்பு குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதிபரின் முடிவை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் சார்ந்த சமூக நல அமைப்புகள், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன" என்று தெரிவித்தனர்.