1967-ல் நடந்த அரபு-இஸ்ரேல் ஆறு நாள் போரானது அரபு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் எல்லாம் தங்களின் சுய-பாதுகாப்பு குறித்த மீள் உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. ஈராக்கின் அதிபர் ஹசன் அல் பக்கர் சதாமின் தாய்வழி உறவினர். ஓரளவு அனுசரணைத்தன்மை கொண்டவர். அதிகாரம் குறித்த தெளிவுடையவர். இருந்தும் சதாம் உசேன்தான் இவருக்கு ஆட்சியமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அந்தத் தருணத்தில் ஈராக்கின் தலைமை இராணுவத் தளபதியாகவும், புரட்சிகரக் குழுவின் தலைவராகவும் சதாம் இருந்தார். 1978-ல் சூயஸ் கால்வாய் சம்பந்தமாக இஸ்ரேல்- எகிப்து இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இது மற்ற பிராந்தியங்களின் மீது பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. சதாம் இதைக் கடுமையாக எதிர்த்தார். மற்ற அரபு நாடுகள் எகிப்துடனான தம் உறவைத் துண்டிக்க வேண்டும் என்றார். இதற்கிடையில் அதிபர் அல் பக்கர்-உடன் பல விஷயங்களில் சதாமுக்குக் கருத்து  வேறுபாடு ஏற்பட்டது.

sathamஎகிப்து, இஸ்ரேல், எண்ணெய் வளம்,  ஈராக்கின் உள்நாட்டுப் போர் போன்றவற்றில் சதாமுக்கு முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் அவரின் பாத் கட்சிக்குள்ளும், வெளியிலும் பக்கர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. பாத் கட்சியைப் பொறுத்தவரை ஸ்டாலினைப் பின்பற்றி ஒரு கட்டத்தில் சர்வாதிகாரமாகவே சென்றது. 1963க்குப் பிறகு அந்தக் கட்சியில் எந்த உரையாடல்களும் அனுமதிக்கப்படவில்லை. கட்சிக்குள்ளும் அதற்கு வெளியிலும் எவ்வித எதிர்த்தன்மையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கட்சியின் கருத்தியல் அமைப்பு தனிமைப்பட்டு அரசில் உள்ள பாதுகாப்பு அதிகாரத்தை சமன்செய்ய முடியாததாக இருந்தது. இந்த நிலையில் சதாம் 1968க்கும் 1970 க்கும் இடைப்பட்ட கட்டத்தில் எதிர்கொள்ள முடியாத தலைமைப்  பாதுகாப்பு அதிகாரியாக மாறினார். ஒரு காலத்தில் கட்சிக்குள் தன்னை எதிர்த்தவர்களிடம், முரண்பட்டவர்களிடம் தவிர்க்க முடியாத நபராக சதாம் இப்போது திரும்பினார். இது நடப்பு அதிபரான அல்-பக்கரை பதவியை விட்டு விலக வைத்தது. எகிப்து, சிரியாவுடனான உறவைத்  தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டதால் பக்கருக்கு, பதவி விலகக் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டன. இதனால் 1979-ல் உடல்நிலையைக் காரணம் காட்டி அல்-பக்கர் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சதாம் அதிபர் பொறுப்புக்கு வந்தார்.

சதாம் அதிபர் பொறுப்பை ஏற்றபின் இரு சவால்கள் அவர் முன் காத்திருந்தன. ஒன்று டேவிட் முகாம் ஒப்பந்தம் என்ற இஸ்ரேல்-எகிப்து ஒப்பந்தம். மற்றொன்று 1979-ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சி. சர்வாதிகார ஷாவைத் தூக்கி எறிந்துவிட்டு பொறுப்பு வந்த கொமைனியின் அரசு உலகின் கவனத்தை ஈர்த்தது. மேலும் எகிப்து-இஸ்ரேல் எல்லை தொடர்பான ஒப்பந்தம் சதாமை எகிப்திய அதிபர் அன்வர் சதாத் மீதான கருத்து உராய்விற்கு வழி வகுத்தது. அந்தக் கால கட்டத்தில் சிரியாவின் அதிபராக இருந்த ஹாபிஸ் அல் ஆசாத்  ஈராக்குடன் பொருளாதார, அரசியல் உறவை வைத்திருந்தார். இருவருமே பாத் கட்சியின் அதிபர்கள். இந்த இரு நாட்டுக் கட்சிகளுக்கிடையேயான உறவு முறை சீரற்றதாக இருந்தது. எகிப்தின் டேவிட் முகாம் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஈராக் அரபு நாடுகளின் ஒருங்கிணைவிற்கு அழைப்பு விடுத்தது. அந்த ஆண்டில் நடைபெற்ற அரபு நாடுகளின் மாநாட்டில் சதாம் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். சிரிய அதிபரான ஹாபிஸ் அல் ஆசாத் சவூதியை நோக்கி “நீங்கள் ஒருங்கிணைவிற்கு வராவிட்டால் உங்கள் படுக்கையறையில்கூட போர் நிகழும்” என்றார். தீவிர விவாதங்களுக்குப் பிறகு எகிப்திய அதிபர் அன்வர்  சதாத்துக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் எகிப்துடன் அரபு நாடுகள் உறவைத் துண்டிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரானியப் புரட்சி ஈராக்கில் ஷியாக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், நம்பிக்கையையும் தோற்றுவித்தது. ஷியாக்கள் அரசதிகாரம் பற்றிய தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். அன்றைய ஈராக்கின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இருந்த ஷியா பிரிவினர் தங்களுக்கான சுய அதிகாரம் குறித்த தேடலைத் தொடங்கினர்.

இதற்கு ஈரானின் மறைமுக ஆதரவும் இருந்தது. சதாமின் காலத்தில் ஈராக்கில் ஷியாக்கள் கட்சியிலும், ராணுவ அதிகாரப் பதவிகளிலும் குறைந்த அளவில் இருந்தனர். இது அந்நியமான உணர்வை அவர்கள் மீது ஏற்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் கொமேனி ஆதரவு ஊர்வலங்கள் ஈராக்கில் வழக்கமான ஒன்றாக இருந்தன. இதற்கிடையில் ஈராக் தங்கள் எண்ணெய் வயல்களை ஆக்கிரமிப்பதாக ஈரான் மீது குற்றஞ்சாட்டியது. கொமைனியின் ஆதரவுப் போராட்டங்கள் ஈராக்கின் ஷியா பிரிவு தலைவரான அல்-சதர் தலைமையில் நடைபெற்றன. சதாம் 1980-ல் இந்தப் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று தன் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். பத்தாயிரம் மேற்பட்டோர் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். அதில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈரான் எல்லைக்கு விரட்டப்பட்டனர். இதன் காரணமாக ஈராக்கில் ஷியாக்களின் எழுச்சி தற்காலிகமாக அடக்கப்பட்டது.

இந்நிலையில் ஈராக், ஈரானில் கொமைனியின் அதிகாரம் தங்கள் நாட்டுக்குப் பெரும் சவாலாகவும், அதன் மூலம் தங்கள் நாட்டு ஷியாக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக்கூடும் என்று பயந்தது. மேலும் அன்றைய கட்டத்தில் ஈராக் ஈரானைவிட ராணுவ ரீதியாக வலுவாகவும் பலமானதாகவும் இருந்தது. சதாம் கொமைனியை வீழ்த்தி விட்டு அங்கு தனக்கு அனுகூலமான அரசை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். ஈராக்-ஈரான் எல்லைகள் நிர்ணயம் தொடர்பாக 1975-ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் கேள்விக்குள்ளான நிலையில் இருந்தது. சத் அல் அரப் என்ற பாரசீக வளைகுடாப் பகுதி  நீர்வழிப் பாதை குறித்து இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு தீவிரமானது. 1980-ல் ஈராக் படைகள் ஈரானிய எல்லையில் தாக்குதல் நடத்தின. ஈராக் ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் கொராசான் நகரை ஈராக்கியப் படைகள் முற்றுகையிட்டன.

An Indian Kashmiri Muslim chants slogansஇந்தக் காலகட்டத்தில் ஐ.நா பாதுகாப்பு சபை இரு நாடுகளும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது சதாம், ஈரான் முதலில் சமாதானத்திற்கு வந்தால் தானும் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதற்கு முரணாக ஈரான் கூறவே  போர் தொடர்ந்து நடைபெற்றது. அந்தக் கட்டத்தில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக சதாமுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது. அதில் வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களும் இருந்தன. ஒரு கட்டத்தில் போர் தீவிரமடைந்து ஈரான் பலவீனமடையும் சூழலுக்குச் சென்றது. இப்போது ஈரானுக்கு பிரான்ஸ், மற்றும் சோவியத் யூனியன் உதவி செய்தது. தொடர்ந்து ஈரான் ஈராக்கின் புகழ்பெற்ற அல்-பஸ்ரா நகரைத் தாக்கியது. பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. இதற்கு பதிலாக ஈராக் ஈரானின் கொரசான் நகர் மீது கடுமையான  தாக்குதலைத் தொடுத்தது. மேலும் ஈராக்கிய டாங்குகள் ஈரானின் கர்க் தீவுகள் மற்றும் எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்தன.

இரு தரப்பிலும் எட்டாண்டுகளாக  நடைபெற்ற போரானது பெரும் உயிர் மற்றும்  பொருட்சேதங்களையும், அழிவையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் 1987-ல் ஐ.நா பாதுகாப்பு சபை மீண்டும் உறுதியான போர் நிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதில் ஈரான்,  ஈராக்கை ஆக்கிரமிப்பாளராக அறிவிக்கும் படியும், அதற்கான போர் இழப்பீட்டையும் கோரி நின்றது. 1988-ல் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஜெனிவாவில் சந்தித்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்து கொண்டனர். மேலும் இருதரப்பினரும் போர்க் கைதிகளை  விடுவிக்க ஒப்புக்கொண்டனர். இந்தப் போர் ஈராக்கின்  தென்கிழக்குப் பகுதியையும், ஈரானின் மேற்குப் பகுதியையும் வெகுவாக நிர்மூலமாக்கச் செய்தது. இதன் பின்னர் ஈராக் மற்ற வளைகுடா நாடுகளுடன் பொருளாதார, அரசியல் ஒப்பந்தம் செய்து கொண்டது. குறிப்பாக  1989-ல் பஹ்ரைன், மற்றும் சவூதி அரேபியாவுடன் ஆக்கிரமிப்பற்ற ஒப்பந்தம் ஒன்றை வரைந்து கொண்டது. போருக்குப் பிந்தைய ஈராக் பொருளாதார ரீதியாகக் கடும் பாதிப்புக்குள்ளானது. எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. அந்நிய கடன் அதிகரித்தது.

உணவு பற்றாக்குறையை நோக்கி ஈராக் சென்றது. இதன் காரணமாக ஈராக் உள்நாட்டு நெருக்கடியைச் சந்தித்தது. இந்நேரத்தில் சதாம் உசேன் இந்த சிக்கல் விரைவில் தீர்ந்து விடும் என்று அறிவித்தார். இந்நிலையில் குவைத் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து ஈராக்கிற்கு வர்த்தக ரீதியான போட்டியை ஏற்படுத்தியது. சதாம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குவைத் எண்ணெய் உற்பத்தியில் பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதன்மூலம் பெட்ரோல்  மீதான உற்பத்தி பலன் தங்களுக்குத் திரும்பும் என்றும் அறிவித்தார். மேலும் குவைத் ஈராக்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதாக ஈராக் குற்றஞ்சாட்டியது. எண்ணெய் வளத்தைத் திருடியிருப்பதாகவும் அதன் மூலம் தங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அறிவித்தது. எண்ணெய் விலையில் ஏற்பட்ட பெரும் சரிவு ஈராக்கிற்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒன்று ஈரான் போருக்குப் பிறகான உள்நாட்டு சீரமைப்பு, இன்னொன்று தன் ராணுவக் கட்டமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கான தேவை. இரண்டிற்கும் இந்த இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதே ஆண்டில் நடைபெற்ற பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளின் (Organisation for petroleum exporting countries) கூட்டத்தில் குவைத்தின் எண்ணெய் உற்பத்தி குறித்த தன் குற்றச்சாட்டை வைத்த சதாம் அதிலிருந்து ஆவேசமாக வெளிநடப்பு செய்தார். இதன் பின்னர் நிலைமைகள் இரு நாடுகளிடையே போர்ச்சூழலை அதிகப்படுத்தின. மேலும் பாரசீக வளைகுடா நாடுகள் மீதான சர்வ வல்லமையைக் கட்டியமைப்பதில்  சதாமை பெருங்கனவு ஒன்று சூழ்ந்து கொண்டது. மேலும் சதாம் தன்னுடைய இந்தக் கனவுலகச் சஞ்சாரம் பெரும் அதிகாரத்தை, புற உலகில் நிறுவுவதோடு உள்நாட்டிலும் பாதுகாப்பானதாக இருக்கும் என நினைத்தார். இதன் தொடர்ச்சியில் 1990 ஆகஸ்ட்-ல் ஈராக் இராணுவம் குவைத் மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்தது. சதாம் அதைத் தன் 19 வது மாநிலமாக அறிவித்தார். சதாமின் இந்த நடவடிக்கை மற்ற வளைகுடா பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதனால் மற்ற நாடுகள் குறிப்பாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், ஏமன் போன்ற நாடுகள் தங்கள் சுய பாதுகாப்பின் தேவை குறித்து சிந்திக்க ஆரம்பித்தன. ஈராக்குடன் ஏற்கனவே பகையில் இருந்த துருக்கி அமெரிக்காவுடன் இணைய ஆரம்பித்தது.

மேலும் ஈராக்கிலிருந்து தன் நாட்டிற்கு வரும் எண்ணெய்க் குழாய்களைத் துண்டிக்க ஆரம்பித்தது. சவூதி அரேபியா அமெரிக்காவின் துணையை நாடி அந்நாட்டுப் படைகளைத் தன் நாட்டில் முகாம் அமைக்க அனுமதியளித்தது. மேலும்  பஹ்ரைன், கத்தர் போன்றவை அமெரிக்கப் படைகளை அனுமதித்தன. அப்போது குவைத்தை ஈராக் விடுவிக்க வேண்டுமென்று ஐ.நா தீர்மானம் நிறைவேற்றி ஈராக்கை வற்புறுத்தியது. இதனை நிராகரித்த சதாம் குவைத்தை விடுவித்தால் அது ஈராக்கிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தலைமையிலான பன்னாட்டுப் படைகள் ஈராக் மீது போர்தொடுத்தன. துருக்கியும் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக இதில் கலந்து கொண்டது. இதுதான் உலக வரலாற்றில் முதல் வளைகுடாப் போர் (Persian Gulf war) என்று வர்ணிக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் இவற்றை பல்கோண வடிவில் காட்சிப்படுத்தின. அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சார்பான காட்சிப் பிரதிகளைக் கட்டமைத்தன. நாற்பது நாட்கள் நடைபெற்ற போரில் ஈராக் பணிந்தது. குவைத் விடுவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஈராக் மீது ஐ.நா பொருளாதாரத் தடை விதித்தது.  தொடர்ந்து ஈராக் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. பஞ்சம், பட்டினி, ஊட்ட சத்துக் குறைவு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டன.

சதாம் இந்தச் சவால்களைக் குறைந்த பட்ச நிலையிலேயே எதிர்கொண்டார். குறிப்பாக உணவுப் பொருட்களின் பற்றாக்குறை அதை வெகுவாக வாட்டியது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட குர்து மற்றும் ஷியா  போராட்டங்கள் ஈராக்கின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கின. அரபுலக வரலாற்றின் எல்லா உள்நாட்டு , வெளிநாட்டுப் போர்களும் இனக்குழு முரண்பாடுகளின் தர்க்க ரீதியான தொடர்ச்சியாகவே இருக்கின்றன. முதல் வளைகுடாப் போரில் பன்னாட்டுப் படைகளிடம் ஈராக்கின்  தோல்வியானது உள்நாட்டு ஷியா, குர்து மக்களிடம் மேல் நோக்கிய உணர்வை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியில் ஏற்பட்ட கலகங்கள் ஈராக் இராணுவத்தால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. ஏராளமான ஷியா மற்றும் குர்து மக்கள் கொல்லப்பட்டனர். ஈரான் போருக்குப் பிறகு ஈராக்கின் வடபகுதியில் குர்துக்களின் எழுச்சிக்கு ஈரான் ஆதரவளித்தது. எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் கலகம் காரணமாக குர்துக்கள் விஷ வாயு செலுத்தப்பட்டு உயிரிழந்தனர். இது சதாமின் அதிகார சகாப்தத்தில் பெரும் கரும்புள்ளியாகக் கருதப்பட்டது.

ஈராக் பற்றிய அமெரிக்க அனுதாபம் என்பது பிராந்திய வகைப்பாட்டு ரீதியாக இல்லாமல் சதாம் என்ற தனிநபர் ரீதியானதே. ஈரானியப் போரில் தான் சதாமுக்கு அளித்த வெகுமானங்களுக்கான நன்றியறிவை அமெரிக்கா சதாமிடமிருந்து எதிர்பார்த்தது. அது நிறைவேறாமல் போனதே  பேரழிவு ஆயுதங்கள் (Weapons of mass destruction) என்ற கருத்துருவின் உருவாக்கம். ஒரு தேர்ந்த சந்தர்ப்பத்தில் ஈராக் மீதான தன் கணக்கை அமெரிக்கா முடித்துக்கொண்டது. செப்டம்பர் 11 நிகழ்வும், அதன் பிறகான ஆப்கான் போரும் அமெரிக்காவை இதற்கான புத்தகங்களைத் திறப்பதற்கு வழி வகுத்தன. சதாமைப் பொறுத்தவரை அவரின் பலம் என்பது அரபு பிராந்தியத்தில் வலுவான இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் இஸ்ரேலுக்கு சவாலான நபராக சதாம் விளங்கினார்.

இளமைக் காலத்தில் சதாமை அதிகம் பாதித்த திரைப்படம் God father. இதில் வரும் வீர சிறுவன் கதாபாத்திரம் சதாமுக்கு இராணுவ ரீதியான போர் உணர்வை இளமைக் காலத்தில் அளித்தது. அதுவே ஒரு கட்டத்தில் பெரும் பலவீனங்களுக்கான தோற்றப்பாடாக மாறிபோனது. மேலும் ஈராக்கின் அதிபராக சதாம் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். ஈராக்கின் புகழ்பெற்ற யூப்ரடீஸ், டைகிரிஸ் நதிகளை இணைப்பது. அதன் மீது புதிய பாலங்களைக் கட்டுவது, விவசாயம்,  நீர்வளம் போன்றவற்றில் தனிக்கவனம் இவை அதிபர் என்ற நிலையில் சதாமுக்கு குவியத்தை ஏற்படுத்தின. ஈரான் போருக்குப் பிறகு சிதைந்த ஈராக்கின் நகரங்களை  சீரமைப்பதில் சதாமுக்கு தனிக்கவனம் இருந்தது. சதாமின் பாத் கட்சி மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கத்தைக் கொண்டிருந்தது என்ற எண்ணம் அறிவுலகில் பரவலாக இருக்கிறது. அது தவறானது என்றே அதன் பரிணாமமும், போக்குகளும் நிரூபித்தன. பாத் கட்சியினர் தங்களின் செயல் தந்திரங்களுக்காக மட்டுமே லெனின் மற்றும் ஸ்டாலின் உபாயங்களைக் கடைப்பிடித்தனர். கருத்தியல் ரீதியாக எந்த வர்க்கப் பார்வையும், சோசலிசக் கட்டுமான உணர்வும் அவர்களிடம் இருக்கவில்லை அவர்களின் பிந்தைய செயல்பாடுகள் இதை நிரூபித்தன. அறுபதுகள் காலகட்டத்தில் ஈராக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்களின் படுகொலை இதை மேலும் வலுப்படுத்துகிறது.

Iraq_header_2ஈராக்கில் சதாம் அடைந்த தோல்வி என்பது பல்வேறு இனங்களிடையேயான அணுகுமுறையில் சர்வாதிக்க தன்மை. இனங்களைக் கையாளும் விதத்தில் சார்பு நிலை. தான் சன்னி பிரிவைச் சார்ந்திருந்த போதும் அதன் சார்பை உறுதிபடுத்தியது மற்ற இனங்களைத் தனக்கு எதிராகத் திரளச் செய்தது. மேலும் ஈரானுடனான எட்டாண்டுகள் போரில் இராணுவ அதிகாரிகள் பலர் துரோகக் குற்றச்சாட்டின் பெயரில் சதாமால் கொல்லப்பட்டனர். இது பற்றி சதாம் பின்னர் குறிப்பிடும் போது ஈராக்கின் துரோகிகளையே தான் கொன்றதாகக் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலின் மேற்கொண்ட அணுகுமுறை சதாமுக்கு முன்மாதிரியாக இருந்தது. இது ஈரான் போரிலும் செயல்படுத்தப்பட்டதால் சொந்த இராணுவத்திற்குள்  சதாமுக்கு எதிரான மனோபாவம் அதிகரிக்கத் தொடங்கியது. இதுவே 2003 போரில் அமெரிக்காவிடம் வெகு விரைவில் தோல்வியடைய காரணம். இராணுவமுரண்பாடுகளைத் தன் உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்த அமெரிக்கா அதை வளர்த்தெடுப்பதில் அதீத கவனம் செலுத்தியது. சதாமுக்கு மரணதண்டனையை அளித்ததன் மூலம் ஈராக் தன் அழிவை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஈராக்கிய நீதிமன்றங்கள் அதன் பிந்தைய வரலாற்றுக் காலந்தொட்டு அரசதிகாரத்தின் செயற்கைக்கோள்களாகவே செயல்பட்டு வருகின்றன.

அறுபதுகளில் அதற்கு முந்தைய அதிபரான அல்காசிம் பல குற்றச்சாட்டுகளின் பேரில் பாத் கட்சியின் உதவியோடு கொல்லப்பட்டார். ஈராக் நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. அவரின் மரணதண்டனை ஈராக் தொலைக்காட்சியின் முன்பு பிம்பமாக்கப்பட்டது. ஈராக்கின் அரசியல் கொலைகள், மரணதண்டனைகள் அதன் வரலாற்றை நிலைகுலைவான ஒன்றாக தொடர்ந்து மாற்றி வருகின்றன. சதாமின் வரலாற்று பலம்-பலவீனம், வெற்றிகள்-தோல்விகள் ஈராக்கின் எதிர்கால வரலாற்றுச் செயல்பாட்டை மறு உருவாக்கம் செய்யும் கருவியாக இன்னும் நிலை கொண்டிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *