வாஷிங்டன்: ‘அமெரிக்க பொருட்களுக்கு அநியாய வரி வசூலிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அவர்கள் விதிக்கும் அதே அளவுக்கான வரியை விதிக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறை வரும் ஏப்ரல் 2ம் தேதி அமல்படுத்தப்படும்’ என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்ற பின் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் நாங்கள் வசூலிப்பதை விட அதிகப்படியான வரியை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. அமெரிக்க வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கும் அதிகமான வரி விதிக்கிது. சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா வசூலிப்பதை விட 2 மடங்கு அதிக வரியை அந்நாடு வசூலிக்கிறது. தென் கொரியாவின் சராசரி வரி 4 மடங்கு அதிகம்.
யோசித்துப் பாருங்கள். தென் கொரியாவுக்கு ராணுவ ரீதியாக பல வழிகளிலும் எவ்வளவு உதவிகள் செய்கிறோம். ஆனால் என்ன நடக்கிறது? இந்த விஷயத்தில் நண்பர்களும், எதிரிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர்.
பூமியில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடுகளாலும் நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம். இனியும் அதை நடக்க விடமாட்டேன். இப்போது எங்கள் முறை வந்துள்ளது. மற்ற நாடுகள் நம் மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரியை நாம் அவர்கள் மீது விதிக்கப் போகிறோம். அதற்கான பரஸ்பர வரி விதிப்பு முறை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரும் ஏப்ரல் 2ம் தேதி அமல்படுத்தப்படும்.
மற்ற நாடுகள் அவர்கள் சந்தையில் எங்களை நுழைய விடாமல் செய்தால் நாங்களும் அதிக வரி போட்டு அவர்களையும் நுழைய விடமாட்டோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசி உள்ளார். இந்தியா உடனான அமெரிக்காவின் மொத்த வர்த்தகம் 2024ல் ரூ.1.11 லட்சம் கோடி. 2024ல் இந்தியாவிற்கான அமெரிக்க பொருட்கள் ஏற்றுமதி ரூ.3.6 லட்சம் கோடி. இதுவே, இந்தியாவில் இருந்து ரூ.7.50 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா பரஸ்பர வரி விதிக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
* கனடா, மெக்சிகோ பதில் நடவடிக்கை
உலக வர்த்தக போரை தொடங்கி உள்ள டிரம்ப், ஏற்கனவே கடந்த 1ம் தேதி முதல் கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். சீன பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா அமலாக்கி உள்ளது. இதற்கு பதிலடியாக, மார்ச் 4ம் தேதி முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரூ.2.60 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக கனடா பதிலடி கொடுத்துள்ளது. இதே போல மெக்சிகோ பரஸ்பர வரி நடவடிக்கையை அறிவித்துள்ளது. சீனாவும் அமெரிக்காவின் முக்கிய வேளாண் பொருட்களின் இறக்குமதிக்கு 15 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
* தீர்வு கிடைக்கும்: இந்தியா நம்பிக்கை
டிரம்பின் வரி மிரட்டலுக்கு நல்ல தீர்வு கண்டறியப்படும் என இந்தியா நம்புவதாக வெளியுறவு அதிகாரிகள் கூறி உள்ளனர். வெள்ளை மாளிகையில் டிரம்ப்-மோடி சந்திப்பின் போது வர்த்தக பற்றாக்குறையை குறைக்க 2030ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்காக பலதுறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்த வர்த்தகத்தை அதிகரிப்பதில் இருதரப்பும் உறுதியாக உள்ளதால், இது சுங்கவரி பிரச்னையில் இருதரப்புக்கும் நன்மை தரும் விளைவை ஏற்படுத்தும் என இந்தியா நம்புகிறது. ஏற்கனவே போர்பன் விஸ்கி, ஒயின் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிகளை குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜஸ்டின் ட்ரூடோ காட்டமான பதிலடி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த பேட்டியில், ‘‘கனடா மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை தொடங்கியிருக்கிறது. அதே சமயம், ரஷ்யாவுடன் நெருக்கமடையும் அதிபர் டிரம்ப், பொய்யரும், கொலைகாரருமான ரஷ்ய அதிபர் புடினை திருப்திபடுத்த முயற்சிக்கிறார். இது என்ன மாதிரியான அணுகுமுறை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும். வரியை அதிகரித்து கனடாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி விடலாம் என டிரம்ப் நினைப்பது ஒருபோதும் நடக்காது. அமெரிக்காவின் 51வது மாகாணமாக நாங்கள் என்றும் இணைய மாட்டோம்’’ என்றார்.
The post அநியாய வரி வசூலிப்பதாக புகார் ஏப்.2 முதல் இந்தியா மீது பரஸ்பர வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.