*காப்பாற்ற முயன்ற தந்தையும் சாவு
திருமலை : ஏரியில் மூழ்கி மகன், மகள் உட்பட 3 பேர் இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், முலகலசெருவு கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் (36), கூலித்தொழிலாளி.
இவரது மகள் நந்திதா (11), மகன் நந்தகிஷோர்(10). நேற்று முன்தினம் அங்குள்ள ஏரியில் துணி துவைப்பதற்காக, வீட்டில் இருந்து மல்லேஷ் சென்றார். அப்போது அவரது மகன் மற்றும் மகள் இருவரும் தாங்களும் ஏரிக்கு வருவதாக கூறினர். இவர்களுடன் பக்கத்துவீட்டை சேர்ந்த சிறுமி லாவண்யா (12) என்பவரும் சென்றார். இவர்கள் 4 பேரும் ஏரிக்கு சென்றனர்.
மல்லேஷ், ஏரிக்கரையில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். மகன், மகள் உள்ளிட்ட 3 பேரும் ஏரியில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் ஏரியில் அடுத்தடுத்து சிறுவர்கள் 3 பேரும் மூழ்கினர். சத்தம் கேட்ட மல்லேஷ், ஏரியில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் சேற்றில் சிக்கி மூழ்கினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முலகலசெருவு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி 4 பேரையும் தேடினர். சில மணி நேரத்திற்கு பின்னர் 4 பேரையும் சடலங்களாக மீட்டனர்.
இதையடுத்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post அன்னமய்யா மாவட்டத்தில் சோகம் ஏரியில் மூழ்கி மகன், மகள் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.