* வழக்கு வரும் 28க்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி: தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் ஜாமீன் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ” ஜாமீன் கிடைத்தவுடன் தான் அவர் அமைச்சராக பதவியேற்றார். மேலும் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைப்பார் என்று உச்ச நீதிமன்றம் கருதினால், இதுதொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வழக்கின் சாட்சியங்கள் குறித்து பேசியது கூட கிடையாது. அப்படி இருக்கும் போது எவ்வாறு அதனை கலைக்க முயற்சி செய்வேன். மேலும் தமிழ்நாட்டில் அரசின் காலம் இன்னும் ஒராண்டில் முடிவடையப்போகிறது. அப்போது இவரது அமைச்சர் பதவியும் முடிவுக்கு வந்துவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜி செல்வாக்கை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய போதே, அமைச்சராக பதவி ஏற்க மாட்டோம் என்று உறுதி அளித்து இருந்தீர்கள். அதனை ஏற்று தான் உங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை தவிர்த்து தகுதியின் அடிப்படையில் உங்களுக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. ஏனெனில் உங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேலான சாட்சியங்கள் உள்ளது. அப்படி இருக்கும் அமைச்சராக எவ்வாறு பதவி ஏற்க முடியும். மேலும் அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் என்ற பதவி முக்கியமா அல்லது ஜாமீன் என்ற சுதந்திரம் முக்கியமா என்பதை கேட்டு தெளிவாக தெரிவியுங்கள். மேலும் ஒன்று அமைச்சர் பதவியை விட்டு விலகி வழக்கை சட்ட ரீதியாக வழக்கை சந்தியுங்கள்.
இல்லையென்றால் ஜாமீனை நாங்கள் ரத்து செய்ய நேரிடும்.அதேப்போன்று இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது. குறிப்பாக ஒரு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமீன் கிடைப்பது சாமானியம் கிடையாது. எவ்வளவு சட்ட ரீதியாக போராட்டம் கண்டு இருப்பீர்கள்?. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் வழங்கிய அனைத்து உத்தரவுக்கும் எதிராக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் எங்களுக்கு அனைத்தையும் தெளிவுப்படுத்த வேண்டும். அதாவது அதில் அமைச்சர் பதவி தான் செந்தில் பாலாஜிக்கு முக்கியமா? அல்லது வழங்கப்பட்ட ஜாமீன் முக்கியமா என்று தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமீன் வேண்டுமா?.. செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.