அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலை நடத்தி வரும் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அயோத்தி நகரமானது பெரும் சுற்றுலா மையமாக மாறிவிட்டது. இதுகுறித்து அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், ‘அயோத்தியில் ராமர் கோயிலை நடத்தி வரும் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அயோத்தி கோயிலானது சுற்றுலா மையமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வரித் தொகையானது கடந்த 5 ஆண்டில், அதாவது பிப்ரவரி 5, 2020 முதல் பிப்ரவரி 5, 2025 வரை மேற்கொண்ட தொகையானது செலுத்தப்பட்டது. அவற்றில் ரூ.270 கோடி ஜிஎஸ்டியாகவும், மீதமுள்ள ரூ.130 கோடி இதர வரிகளாகவும் செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 5 கோடி பேர் அயோத்தி கோயிலுக்கு வருகை தந்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் அயோத்தியில் நடந்து வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக இதுவரை மொத்தம் ரூ.2,150 கோடி செலவிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பக்தர்களிடமிருந்து அறக்கட்டளை 944 கிலோ வெள்ளி காணிக்கை கிடைத்துள்ளது. ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 96 சதவீதம் முடிந்துவிட்டது. வரும் ஏப்ரல் 6ம் தேதி ராம நவமி அன்று, மதியம் 12:00 மணிக்கு சூரிய கதிர்கள் ராம் லல்லா மீது நான்கு நிமிடங்கள் ஒளிரும்’ என்றார்.
The post அயோத்தி ராமர் கோயிலில் 5 ஆண்டில் ரூ.400 கோடி வரியாக வசூல்: அறக்கட்டளை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.