திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு, இளம் இந்தியாவை இலக்காக கொண்டு, மக்கள் தொகை மேலாண்மை குறித்து கடந்த சில மாதங்களாக பிரசாரம் செய்துவருகிறார். அதற்கேற்ப சமீபத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற தேர்தல் விதியை அவர் நீக்கி மாற்றம் செய்தார். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்க்கபுரத்தில் நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது:
உலக நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் அந்த நாடுகள் வருங்காலத்தில் இளைஞர்கள் இல்லாத நாடாக மாறும். எனவே மக்கள் சதவீத மேலாண்மை கட்டாயம் இருக்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறைக்கென 6 மாத விடுமுறை உள்ளது. அதுகூட 2 குழந்தைகளுக்குள் இருந்தால் மட்டுமே தரப்படுகிறது. ஆனால் இதனை இப்போது மாற்றி அறிவிக்கிறேன். இனி, அரசு ஊழியர்கள் 3 அல்ல, 4 அல்ல, 6 குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறை 6 மாதம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு கூடுதல் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post அரசு ஊழியர்கள் 6 குழந்தைகளை பெற்றாலும் மகப்பேறு விடுமுறை: ஆந்திர முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.