புதுடெல்லி: மிக்ஜாம், பெஞ்சல் புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த பேரிடர் நிதியும் இல்லை என ஒன்றிய அரசு மீண்டும் கைவிரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,555 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், கல்வி நிதியை தொடர்ந்து தற்போது பேரிடர் நிதியிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.6,000 நிவாரணமாக அறிவித்து உடனடியாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு அறிக்கை கொடுத்து இருந்தது. புயல், வெள்ள பாதிப்புக்காக ரூ.37,907 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் தற்போது வரையில் இந்த விவகாரத்தில் எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதேப்போன்று கடந்த ஆண்டு ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையும் கிடப்பில் தான் உள்ளது. ஒன்றிய அரசு நிதியே தராத நிலையிலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ₹498.80 கோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதன் மூலம், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள்.
இந்த நிலையில், பேரிடர் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ₹1,554.99 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு ₹608.08 கோடியும், நாகலாந்துக்கு ₹170.99 கோடியும், ஒடிசாவுக்கு ₹255.24 கோடியும், தெலங்கானாவுக்கு ₹231.75 கோடியும் திரிபுராவுக்கு ₹288.93 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிதி ஒதுக்கீட்டில் இந்த முறையும் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, வயநாடு நிலச்சரிவால் கடுமையான பாதிக்கப்பட்ட கேரளாவுக்கும் எந்த நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. பேரிடர் நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த போதிலும், தற்போது ஒன்றிய அரசால் தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி வருகிறார். இந்த சூழலில் பேரிடர் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.
The post ஆந்திரா உட்பட 5 மாநிலங்களுக்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு; தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி இல்லை: ஒன்றிய அரசு மீண்டும் கைவிரிப்பு appeared first on Dinakaran.