புதுடெல்லி: கடந்த 2014ல் 19 வயது வாலிபரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். அப்போது இருவரும் டெல்லியில் இருந்து காஜியாபாத் சென்று கோயிலில் திருமணம் செய்து குடும்பம் நடத்தினர். இதையறிந்த போலீசார் 19வயது வாலிபரை கைது செய்து, சிறுமியை மீட்டனர். வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத்சிங் விசாரித்தார்.
அப்போது,’ இது இளமைப் பருவ காதல். வாலிபருக்கு வயது 19. சிறுமிக்கு 17. அவர்களுக்கிடையேயான சம்மத அடிப்படையில் உடல் ரீதியான உறவு நடந்துள்ளது. அதற்காக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிப்பது நீதியின் வக்கிரம். நீதிக்கு மாறான செயல். மேலும் சிறுமி 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதற்காக அவரது கருத்தையும், பார்வையையும் ஒதுக்குவது முறையற்றது. ஏனெனில் சிறுமியின் வயதை அரசு தரப்பில் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை வாலிபருக்கு வழங்கி அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடுகிறேன்’ என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
* சட்டம் வேண்டும்
நீதிபதி கூறுகையில்,’ இளம் பருவ காதல் பற்றிய சமூக பார்வை மாற வேண்டும். அதில் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் இல்லாத காதல் உறவுகளில் ஈடுபடும் இளைஞர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். காதல் ஒரு அடிப்படை மனித அனுபவம். இதில் இளம் பருவத்தினருக்கு உணர்ச்சி ரீதியான தொடர்புகளை உருவாக்க உரிமை உண்டு. இந்த உறவுகள் ஒருமித்த மற்றும் வற்புறுத்தலின்றி இருக்கும் வரை, இந்த உறவுகளை அங்கீகரிக்கவும், மதிக்கவும் சட்டம் உருவாக வேண்டும்.
காதலைத் தண்டிப்பதை விட சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதில்தான் சட்டத்தின் கவனம் இருக்க வேண்டும் . சிறார்களைப் பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் வயது முக்கியமானது என்றாலும், இளம் பருவத்தினர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், குற்றவியல் பயமின்றி உறவுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒருமித்த மற்றும் மரியாதைக்குரிய இளமைப் பருவக் காதல் மனித வளர்ச்சியின் இயல்பான பகுதி என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்’ என்றார்.
The post இதுக்கெல்லாம் போக்சோ போடுவதா?…இளம் பருவ காதலில் சம்மத உறவு குற்றமில்லை: 19 வயது வாலிபரை விடுவித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.