கவுகாத்தி: இந்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தால் ராகுல்காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் அசாம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் கோட்லா சாலையில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகத்தை திறந்து வைக்கும் போது மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ‘பாஜகவும், ஆர்எஸ்எஸ்-வும் நாட்டின் ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளன. தற்போது நாம் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசையே எதிர்த்துப் போராடுகிறோம்’ என்று கூறினார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மோன்ஜித் சேத்தியா என்பவர், பான் பஜார் காவல் நிலையத்தில் ராகுல் காந்தி மீது அளித்த புகாரில், ‘இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரது பேச்சானது அனுமதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தின் வரம்புகளை மீறியுள்ளது. பொது அமைதி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியின் வார்த்தைகள் இந்திய அரசின் அதிகாரத்தை சட்டவிரோதமாக்கும் முயற்சியாக உள்ளது. அமைதியின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது. தனது போராட்டம் இந்திய அரசுக்கு எதிரானது என்று கூறியதன் மூலம், அவர் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும்படி உள்ளது.
ராகுல் காந்தியின் கருத்துக்கள் அவரது கட்சியின் தொடர்ச்சியான தேர்தல் தோல்வியின் வெளிப்பாடாக உள்ளது. விரக்தியால் அவர் பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர், ஜனநாயக அமைப்புகளின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்குகிறார். ஜனநாயக வழிமுறையின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாததால், அவர் ஒன்றிய அரசுக்கும், இந்திய அரசுக்கும் எதிராக பேசியுள்ளார். எனவே அவர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 152-இன் கீழ் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேற்கண்ட புகாரின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு எதிராக பி.என்.எஸ் சட்டப் பிரிவு 152 மற்றும் 197 (1) டி-இன் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post இந்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து: ராகுல்காந்தி மீது 2 பிரிவில் அசாம் போலீசார் வழக்கு appeared first on Dinakaran.